பிப்ரவரி 11 அன்று தம் முன் வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என்று Twitter என்கிற சுட்டுரையின் நிறுவனர் – தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்ஸேக்கு ஆணை பிறப்பித்திருந்தது பாரத நாடாளுமன்ற நிலைக்குழு. எதற்காக இந்த ஆணை? ட்விட்டர் உலகெங்கும் அவ்வப்போது சிக்கல்களில் மாட்டிக்கொள்வதுண்டு. 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு எப்படி பாதிப்பை ஏற்படுத்தியது என்பது இன்றளவும் விசாரணையில் உள்ளது என்றும் அவற்றுள் பெரும்பங்கு ட்விட்டருக்குத்தான் என்றும் அமெரிக்க விசாரணை அதிகாரிகளால் குற்றம் சாட்டப்படுகிறது.
நம் நாட்டில் சில ஆண்டுகளாகவே ட்விட்டர் மீது அதிருப்தி நிலவுகிறது. வலைதள நிர்வாகிகள் தாங்கள் சுத்த சுயம்பிரகாச ஜனநாயகவாதிகள் என்று மார்தட்டிக்கொள்வார்கள். ஆனால் செயல்களோ நேர்மாறனவை.
ட்விட்டர் நடுநிலையற்றது. தங்களுக்கு எது தேவையோ அதனை உயர்த்தி, தேவையில்லை என்றதைப் புறம்தள்ளியும் ஏனைய ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றனவோ அப்படித்தான் ட்விட்டர் என்கிற சுட்டுரையும் செயல்படுகிறது என்றும் இதன் வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள். இடதுசாரி, நாத்திக
கருத்துகளுக்கு ரத்தினக் கம்பளம், தேசிய நடுநிலைக் கருத்துகளுக்கு அறிவிக்கப்படாத வெட்டு என்று கிட்டத்தட்ட ‘த ஹிந்து’ ஆங்கில தமிழ் நாளிதழ் குழுமம் போல் செயல்படுகிறது என்று கருதப்படுகிறது. ஒருசில எடுத்துக்காட்டுகள்:
- மூன்று மாதங்கள் முன்னர் ஜாக்டோர்சே பாரத தலைநகர் தில்லியில் பெண் எழுத்தாளர்கள் நடத்திய ஒரு மாநாட்டின் மேடையில் ‘‘பிராம்மணிய ஆணாதிக்கத்தை அடித்து நொறுக்கு” என்று பொருள்படும் “Smash Brahminical Patriarchy’ என்ற போஸ்டரை உயர்த்திப் பிடித்திருக்கிறார். அவர் கையில் அந்த போஸ்டரைத் திணித்த பெருமை, தலித்தியம் – பெண்ணியம் பேசும் அமெரிக்கா வாழ் தமிழச்சியான தேன்மொழி சவுந்தரராஜனைச் சேரும். மேடையில் இருந்த இன்னொரு பிரபலம் பர்க்கா தத்.
- அப்பொழுதே பல புகழ் பெற்ற அறிஞர்களும் நடுநிலையாளர்களும் ஜாக் டோர்சேக்கு கண்டனம் தெரிவித்தனர். மோகன்தாஸ் பய், “நீங்கள் இதைப்போல் வளைகுடா நாட்டில் ஒரு மேடையில் பேசும் துணிவு உண்டா?’’ என்று கன்னத்தில் அறையும் விதமாகக் கேட்டார். எதிர்ப்பு வலுப்படவே ட்விட்டரின் இந்திய பொறுப்பு அதிகாரி விஜய கத்தே மன்னிப்பு கேட்டார்.
- ஆறு மாதங்கள் முன்பு சோனம் மஹாஜன் என்ற பெண்மணியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இந்த பெண்மணி காஷ்மீரைச் சேர்ந்தவர். அவர் செய்த குற்றம்? இடது சாரிகள் – பெண்ணியம் என்ற போர்வையில் உலவும் பா.ஜ.க – மோடி எதிர்ப்பாளர்களை நிறுத்தி வைத்து நறுக்குத்தெறித்தாற் போல் அவ்வப்போது கேள்வி கேட்டு வந்தார். அப்பொழுது தேசியவாதிகள் ட்விட்டருக்கு கண்டனம் தெரிவித்து சோனமிற்கு ஆதரவாக “Bring Back sonam’ என்ற ஹாஷ்டேக்கில் பதிவிட்டனர்.
ட்விட்டர் என்கிற சுட்டுரையின் சின்னம் சிட்டுக்குருவி. மென்யையான பரிதாபப்படவேண்டிய பறவை. ஆனால் அது கோட்டான் வேலை செய்ய முற்பட்டால் புரியவைக்கவேண்டியது அரசின் கடமை.