உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சித் தலைவரும், சம்பல் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷபிகுர் ரஹ்மான் பர்க், ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “இஸ்லாம் மட்டுமே உண்மையான மதம். பாரதம் ஒருபோதும் ஹிந்து ராஷ்டிரமாக இருந்ததில்லை, ஒருபோதும் இருக்கப் போவதில்லை” என்றும் கூறியுள்ளார். பாரதத்தை ஒரு ‘ஹிந்து ராஷ்டிரம்’ என்று ஜூனா அகாரா மகாமண்டலேஷ்வர் யதீந்திரானந்த் கிரி அறிவித்திருந்தார். இதனால் கோபமடைந்த ஷபிகுர் ரஹ்மான் பர்க், இக்கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும், குரானை படிக்குமாறு யதீந்திரானந்த் கிரிக்கு அறிவுரை கூறிய அவர், குரானை படிக்காத, முஸ்லிம்மாக இல்லாத கிரிக்கு இஸ்லாம் பற்றி விவாதிக்க உரிமை இல்லை என்றும் கூறினார். ஹிந்து துறவிகள் குறித்து கருத்து தெரிவித்த பர்க், துறவிகளுக்கு இஸ்லாம் பற்றிய அறிவிப்புகளை வெளியிடுவதற்கோ அல்லது ஃபத்வா (தடை) வழங்குவதற்கோ எந்த தேவையும் இல்லை என்று கூறினார். மேலும், “இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள், முதல்வர் மற்றும் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரியின் கருத்துகளை எல்லாம் ஏற்க மாட்டார்கள். அல்லாவால் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்லாம் மட்டுமே உலகில் உண்மையான மதம். மற்றவை அனைத்தும் பிற்காலத்தில் உருவான வழிபாட்டு முறைகள். குரான் ஒரு தெய்வீக வேதம். இது மில்லியன் கணக்கான தனிநபர்கள் வாழ்க்கையில் செழிக்க ஒரு ஊக்கமாக செயல்படுகிறது. இந்த புத்தகத்தை மாற்ற முடியாது. அவ்வாறு செய்ய முற்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்தார்.
ஷபிகுர் ரஹ்மான் பர்க்கின் இந்த கருத்துக்கு பதில் அளித்துள்ள யதீந்திர நந்த் கிரி, “பர்க் போன்றவர்கள் சர்ச்சைக்குரிய அறிக்கைகளை மட்டுமே வெளியிட முடியும், வேறு எதுவும் கிடையாது” என்று கூறினார். இதற்கிடையில், கஜுராஹோ ஹோட்டலில் நடந்த இலக்கிய விழாவில் கலந்து கொண்ட டெல்லியைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் மனோஜ் திவாரி, “பாரதம் ஏற்கனவே அடிப்படையில் ஒரு ஹிந்து ராஷ்டிரம் தான். இந்தக் கண்ணோட்டம் பலரால் பகிரப்பட்டாலும், வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. நாங்கள் அரசியலமைப்பை தான் வழிகாட்டியாக பயன்படுத்துகிறோம், பின்பற்றி வருகிறோம்” என கூறினார். சமீப காலமாக இதுபோன்ற பிரச்சனைக்குரிய அறிக்கைகளை சில முஸ்லிம் மதத் தலைவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இது திட்டமிட்ட வகையில் நடத்தப்படும் சதித் திட்டம், மற்ற மதங்களின் மீதான தாக்குதல் மற்றும் அவர்களது மதத்தை பரப்பும் நடவடிக்கை என பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். முன்னதாக, ஜமியத் உலமா இ ஹிந்த் தலைவர் மஹ்மூத் ஆசாத் மதானி, பாரதத்தை முஸ்லிம்களின் முதன்மை தாயகம் என்று கூறியிருந்தார். மற்றொரு மூத்த ஜமியத் தலைவரான மௌலானா அர்ஷத் மதானி, டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற ஜமியத் உலமா இ ஹிந்த் மாநாட்டில் பேசியபோது, ஓம். என்ற பிரணவத்தைய அல்லாவுக்கு இணையாகக் கூறி, மற்ற மதத் தலைவர்களின் கோபத்தை தூண்டினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர்கள், மேடையை விட்டு வெளியேறினர் என்பது நினைவு கூரத்தக்கது.