புதுவை பல்கலைக் கழகத்தின் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப துறையில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், உபயோகிக்கப்பட்ட காகித தேனீர் கோப்பைகளை கொண்டு எளிய வேதியியல் செயலாக்கத்தின் மூலம் செலினியம் கலந்த மெசோபோரஸ் கார்பனை மின்முனையை உருவாக்கி அதன் மூலமாக பேட்டரி ஒன்றை உருவாக்கியுள்ளனர். பேராசிரியர் பெ. ஏழுமலை தலைமையில், ஆராய்ச்சியாளர் செல்வி வை. சங்கர் தேவி ஒரு எளிய முறையிலான வேதியியல் செயலாக்கத்தின் மூலம் உயர் சக்தி கொண்ட மின்முனையை (Electrode) உருவாக்கி அதன் மூலம் அதிக ஆற்றல் திறன் கொண்ட லித்தியம் ஆக்சிஜன் பேட்டரியை (Li-O2) தயாரித்து சோதனை செய்துள்ளனர். இவ்வளவு சிறப்பு மிக்க இந்த ஆய்வுக் கட்டுரையானது லண்டனில் இருந்து வெளிவரும் ராயல் வேதியியல் சொசைட்டியின் பன்னாட்டு இதழான New Journal of Chemistryயின் அட்டைப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், அவர் பல்கலைக் கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். லித்தியம் ஆக்சிஜன் பேட்டரி (Li-O2) அதிகபட்சமாக 3,500 W h kg-1 ஆற்றல் (காற்றின் எடையை உள்ளடக்கியது) கொண்டுள்ளது. இது வழக்கமான லித்தியம் அயான் பேட்டரியை விட பத்து மடங்கு அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும், இது வளிமண்டலக் காற்றில் இருக்கும் ஆக்சிஜனை (O2) நேர்மின்முனையாக (cathode) பயன்படுத்துவதால் இவற்றின் விலை மிகவும் குறைந்ததாகவும் மற்றும் இலகுவானதகவும் உள்ளது.