எல்லாவித பயங்கரவாதங்களையும் முறியடிப்பதில் பாரத அரசுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட திட உறுதி பூண்டிருக்கிறது. பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-எ-முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பு இந்த கொடூரச் செயலுக்கு பொறுப்பேற்றிருக்கிறது. பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஆதரிப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும்.
– அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி அறிக்கை.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று ஜப்பான் கோருகிறது. தன் மண்ணில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் கலைக்கவேண்டும். – ஜப்பான்
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத செயலில் பாரத காவல் அதிகாரிகள் பலியானதற்கு மனப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
– ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்
* பாகிஸ்தானை கண்டனம் செய்யும் பாரத வெளியுறவுத் துறை அறிக்கைக்கு மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், புரூனே, இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.
* காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலை ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம் செய்துள்ளது. பயங்கர வாதத்திற்கு எதிரான போரில் பாரதத்திற்கு ஆதரவு அளிப்பதாக அமீரகம் தெரிவித்துள்ளது.
* “இந்தோனேஷிய மக்களும் அரசும் பயங்கரவாத தாக்குதலுக்கு பலியானவர்கள் குறித்து ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக் கொள் கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச முயற்சிக்கு இந்தோனேஷியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்” என்று அந்த நாட்டின் அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
*பாரதத்தின் நெருங்கிய நண்பனும் பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தேசம் ஆப்கானிஸ்தான் சி.ஆர்.பி.எஃப் ஜவான்கள் தாக்கப்பட்டதைக் கடுமையாக கண்டனம் செய்துள்ளது. நமது பொது எதிரியை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபடும் நாடுகளுடன் நாம் தோளோடு தோள் நிற்போம் என்று தெரிவித்துக்கொள்கிறோம் என்கிறது ஆப்கானிஸ்தான்.
* நியூஸிலாந்தும் ஆஸ்திரேலியாவும் பாரத துணை ராணுவ படையினர் மீது ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை கண்டனம் செய்துள்ளன.
* ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குத்ரஸ், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டனம் செய்துள்ளார். பாரத அரசுக்கும் மக்களுக்கும் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
குற்றவாளி பாகிஸ்தான் நழுவப் பார்க்கிறது
தீர விசாரிக்காமல் பாரதம் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை குறைசொல்வதை ஏற்கமுடியாது என்கிறது பாகிஸ்தான். நடந்துள்ள பயங்கரவாத தாக்குதலுக்கு நாங்கள்தான் பொறுப்பு என்று ஜெய்ஷ்–எ-முகம்மது என்ற பயங்கரவாதக்குழு அறிவித்துள்ளது. அது இயங்குவது பாகிஸ்தான் மண்ணிலிருந்துதான். அதன் தலைவன் மசூத் அஜார் இருப்பது பாகிஸ்தானில்தான்.