கன்யாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் விக்டோரியா கௌரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இவர் பா.ஜ.கவின் மகளிரணியான மகிளா மோர்ச்சாவின் மாநிலச் செயலாளராக இருந்தவர். இதனால், ஒரு கட்சி சார்புடைய வழக்கறிஞரான அவரை எப்படி நீதிபதியாக நியமிக்கலாம் என கேட்டு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உட்பட சில அரசியல்வாதிகளும், குறிப்பிட்ட சில மத, கட்சிகளை சார்ந்த சில வழக்கறிஞர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ‘மதசார்பற்ற’ என கூறிக்கொள்ளும் சில வழக்கறிஞர்களும் இதற்கு உள்நோக்கத்துடன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்த பரிந்துரையை திரும்பப்பெற வேண்டும் என உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், நீதிமன்றத்தின் யதார்த்தம் என்னவென்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். இதனிடையே, இந்த செய்தியை தனது டுவிட்டரில் பகிர்ந்துகொண்ட முன்னாள் ஆளுநர் ஸ்வராஜ் கௌஷல், அரசியல் கட்சி சார்ந்த எம்.பிக்கள் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட வரலாறு ஏற்கனவே உள்ளது. குறிப்பாக நீதிபதிகள் கே.எஸ் ஹெக்டே, பகருல் இஸ்லாம் ஆகிய இருவரும் நீதிபதிகளாக பணியமர்த்தப்பட்டபோது காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களாக இருந்தனர். நீதிபதி கிருஷ்ண ஐயர் கேரள அரசின் கேபினட் அமைச்சராகவே இருந்தார் என குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், நீதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டபின், நீதிபதிகள் அதன்படி நடக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இந்த டுவிட்டர் பதிவை தனது டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ என்பது குறிப்பிடத்தக்கது.