பரபரப்பான அரசியல் சூழலில், நேற்று காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். இது குறித்து பா.ஜ.க தலைமையகம் கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ரவி, “தமிழக மக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க. ஸ்டாலின் தலைமையிலான கட்சிக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு குறைந்து வருகிறது. இதற்கு காரணம் ஊழல், தி.மு.கவினர் ஒரு குடும்ப வளர்ச்சிக்காகவே உழைப்பது. மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை உயர்த்தி தி.மு.க தமிழக மக்களை வஞ்சித்துள்ளது. தி.மு.க எம்.பிக்கள், மாநில அமைச்சர்கள், நிர்வாகிகள் தமிழக கலாச்சாரத்திற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தி.மு.க மக்களிடம் கெட்ட பெயர் வாங்கியுள்ளது. இந்த நேரத்தில் நிலையான, உறுதியான தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகத்திற்கு தேவை. தி.மு.கவை எதிர்க்க வேண்டும் என்றால் உறுதியான, நிலையான வேட்பாளர் வேண்டும். தி.மு.கவை வீழ்த்த ஒருங்கிணைந்த அ.தி.மு.க வேண்டும், ஒன்றிணைந்து இருந்தால் தி.மு.கவை வீழ்த்த முடியும், தமிழக நலனுக்காக இணைந்து செயல்படுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்திடம் எடுத்துக்கூறினோம். இந்த தேர்தல் விஷயத்தில் பா.ஜ.க நிலைப்பாடு குறித்து தெரிவிக்க பிப்ரவரி 7ம் தேதி வரை அவகாசம் உள்ளது” என்று கூறினார். இதையடுத்து பேசிய அண்ணாமலை, தி.மு.க மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். திமுகவிற்கு எதிராக ஒரு வலிமையான பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.