ஜம்மு காஷ்மீரின் உதம்பூரை சேர்ந்த ஹிந்து பெண்ணான பிரியங்கா கோல்கோல்த்ரா, கடந்த ஆண்டு டிசம்பர் 2ல் ரோஷன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு ரோஷன், பிரியங்காவை பாகிஸ்தான் அல்லது துபாய்க்கு சென்று வாழலாம் என அவ்வப்போது கட்டாயப்படுத்தி உள்ளார். அதற்கு பிரியங்கா மறுத்துள்ளார். இதனால், பிரியங்காவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் ரோஷன். இந்த சூழலில் கணவரின் முகநூல் பக்கத்திற்கு சென்று பார்த்த பிரியங்கா, அதில் பாகிஸ்தான் தேசிய கொடியுடன் ரோஷன் இருக்கும் புகைப்படங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கணவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பதை தனக்கு தெரியாமல் மறைத்து, திருமணம் செய்துள்ளார் என அறிந்த பிரியங்கா, திடீரென காணாமல் போனார். இதனால் பதற்றம் அடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடினர். பின்பு, உதம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரித்துவந்த ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர், மத்தியப் பிரதேசம் போபாலில், மன்ஜீத் என்ற நபருடன் பிரியங்கா ஒன்றாக வசித்து வருவதை கண்டுபிடித்தனர். இதனிடையே, போபால் நீதிமன்றத்தில் தனது பாகிஸ்தானிய கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி பிரியங்கா வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், அவருடன் சேர்ந்து வாழவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறி வசிக்கவோ எனக்கு விருப்பம் இல்லை என தெளிவாக கூறியுள்ளார். அந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை உயரதிகாரி ராஜேஷ் சிங் கூறியுள்ளார்.