காவல்துறையில் குற்றவாளிகள்

தமிழகத்தை போலவே, சி.பி.எம் இடதுசாரிகளும் கேரள முதல்வர் பினராயி விஜயனும் தாங்கள் ஆட்சி செய்யும் கேரளா தான் அனைத்து துறைகளிலும் ‘நம்பர் 1’ என்று தம்பட்டம் அடித்து வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த சூழலில், கடந்த 6 ஆண்டுகளில் கேரள காவல்துறையைச் சேர்ந்த 828 பேர் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. கேரள முதல்வரே சமீபத்தில் சட்டப்பேரவையில் இதனை தெரிவித்துள்ளார். இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதால் தற்போது கடுமையான குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள காவல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் மற்றும் பணி நீக்கம் செய்யவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கையை மாநில உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. பணிநீக்கம் செய்யப்படுவதை எதிர்கொண்டுள்ளவர்களில் கான்ஸ்டபிள் முதல் துணை எஸ்பி வரை வெவ்வேறு நிலைகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இதில், போக்சோ வழக்குகளில் தொடர்புடைய காவலர்களின் எண்ணிக்கை 23 என்பது அதிர்ச்சி தரும் விஷயமாக உள்ளது. இதைத்தவிர, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல், காவல் மரணங்கள், வரதட்சணை வழக்கு, சமூக விரோத செயல்கள், சட்டவிரோத நடவடிக்கைகள், வன்முறைகள், தாங்கள் செய்த அதே குற்றங்களை மீண்டும் மீண்டும் செய்வது என பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை  முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கக்கூடிய வகையிலான வழக்குகளும் இதில் அடங்கும். ஏற்கனவே, மாற்று மத அமைப்பினர், அதன் தலைவர்கள் உள்ளிட்டோரின் முக்கியத் தகவல்களை பயங்கரவாதிகளுக்கு பகிர்வதற்காக ‘பச்சை விளக்கு’ என்ற பெயரிலான வாட்ஸ்அப் சமூக ஊடகத்தில் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருந்த சில கேரள காவலர்கள் கண்டறியப்பட்டது நினைவு கூரத்தக்கது.