காசி தமிழ் சங்கமத்தில் ஜெய்சங்கர்

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள பன்னெடுங்கால கலாசார தொடர்புபை மீட்டெடுத்து வலுப்படுத்தும் விதமாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில், காசி தமிழ் சங்கமத்தின் ஒரு பகுதியாக, ‘சமூகம் மற்றும் தேச கட்டமைப்பில் கோயில்களின் பங்கு’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். ‘வணக்கம் காசி’ என்ற பெயரிலான இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நம்முடைய பாரம்பரியம் மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோயில்கள் உள்ளன. அவை நமது வாழ்வின் வழிமுறையாகும் என பேசினார். காசி விஸ்வ நாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஜெய்சங்கர், பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, காசியில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு, வாரணாசியில் உள்ள பாரதியாரின் மருமகன் உறவுமுறையான கே.வி. கிருஷ்ணன் வீட்டுக்கு சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார். பின்னர் இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில், “மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளான இன்று, காசியில் அவரது குடும்பத்தினரைச் சந்திக்கும் பேறு கிட்டியது. அவரது உறவினர் கே.வி கிருஷ்ணனிடம் ஆசீர்வாதமும் ஊக்கமும் பெற்றதில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்” என தெரிவித்தார்.