காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் காசி மற்றும் தமிழகத்துக்கு இடையே ‘காசி தமிழ்ச் சங்கமம் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற எட்டாவது தமிழக குழுவின் பிரதிநிதிகளுடன் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துரையாடினார்.இந்தப் பயணத்தின்போது தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அந்தக் குழுவினர் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர்.அத்துடன் அவர்களுக்கு கிடைத்த உபசரிப்புக் குறித்தும் அவர்கள் விளக்கி நன்றி தெரிவித்தனர்.இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக (ஐ.ஆ.ர்சி.டி.சி) குழுவினரின் முயற்சிகளை அமைச்சர் பாராட்டினார்.இதுபோன்ற மக்களிடையேயான பரிமாற்ற நிகழ்ச்சிகள் நமது மரபுகள், அறிவு மற்றும் கலாச்சாரத்தில் பிணைப்பை ஏற்படுத்தி நெருக்கத்தை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.அதே நேரத்தில் பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கி, இந்த இரு பகுதி மக்களிடையே உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.பின்னர், வாரணாசி சந்திப்பு ரயில் நிலையத்தின் மறு சீரமைப்புத் திட்டங்களையும் மத்திய ரயில்வே அமைச்சர் ஆய்வு செய்தார்.வருங்காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பைத் திட்டமிடுமாறு அவர் அறிவுறுத்தினார்.இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை அடுத்த 50 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டு முன்கூட்டியே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. வாரணாசி நகரப் பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதை எளிதாக்கும் வகையில், இப்பகுதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படும். பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில் தூங்கும் வசதியுடன் கூடிய (ஸ்லீப்பர்) வந்தே பாரத் ரயில் தயாரிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.