மின் வாரியத்தின் புதிய கட்டணக்கொள் (ளை) கை

சென்னை உட்பட மாநிலம் முழுதும், பல வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்புகளில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், தனி மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும், குடியிருப்புகளின் வளாகத்தில் உள்ள விளக்குகள், கூட்ட அறை, லிப்ட், மோட்டார் பம்ப், ஜிம் போன்றவற்றை உள்ளடக்கிய, ‘காமன் சர்வீஸ்’ எனப்படும் பொது சேவைகளுக்கென, தனி மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த பொது சேவை மின் இணைப்புக்கும் இதுவரை வீட்டு பிரிவில் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுமக்கள், பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பையும் மீறி, கடந்த செப்டம்பர் 10 முதல் மின் கட்டணத்தை அபரிமிதமாக உயர்த்தி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. அந்த கட்டண ஆணையில், அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது சேவை மின் பயன்பாட்டிற்கு வீட்டு கட்டணத்திற்கு பதில் புதிய கட்டண விகிதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 1 யூனிட் மின் பயன்பாட்டிற்கு ரூ. 8 கட்டணமும்; நிரந்தர கட்டணமாக மாதம் 1 கிலோ வாட்டிற்கு ரூ. 100 நிர்ணயம் செய்யப்பட்டது. இதுவரை, 2.50 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளில், வீட்டு பிரிவில் இருந்த பொது சேவைகளுக்கான மின் கட்டண விகிதம், புதிய கட்டண விகிதத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தினரின் பொது பயன்பாட்டு மின்சாரம் என்றாலும் இதனை வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்தவில்லை எனும்போது, இப்படி வலுக்கட்டாயமாக மாற்றியமைப்பது தவறு, பழையபடியே மிங்கட்டனம் தொடர வேண்டும் என பொதுமக்கள் வாதிட்டு வருகின்றனர். எனவே, இந்த கட்டண விகிதம் மாற்றும் பணிக்கு பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.