காரைக்குடியை அடுத்த அரியக்குடியில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் பிரசித்திபெற்ற திருவேங்கடமுடையான் கோயில் உள்ளது. இக் கோயிலுக்குச் சொந்தமான கோயில் அருகே அக்டோபர் 7ம் தேதி பள்ளிவாசல் திறக்க உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில் கோயில், வீடு அருகே பள்ளிவாசல் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி அமைப்பினர் அப்பகுதியில் குவிந்தனர். பதற்றமான சூழல் ஏற்பட்டதையடுத்து அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து முஸ்லிம் தரப்பினரை அழைத்து, வட்டாட்சியர் மாணிக்கவாசகம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து பேசிய வட்டாட்சியர், ‘அரியக்குடியில் அரபிக் பாடசாலைதான் கட்டினோம். பள்ளிவாசல் கட்டவில்லை என முஸ்லிம் தரப்பினர் தெரிவித்தனர். எதுவாக இருந்தாலும் உரிய அனுமதி பெற்று திறக்கும்படி அறிவுறுத்தினோம். அவர்களும் உரிய அனுமதி பெற்று திறப்பதாக கூறியுள்ளனர்’ என்றார். இதனிடையே அரியக்குடி ஊராட்சித் தலைவர் சுப்பையா, கட்டட வரைபட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டார்.