திருப்பூர் பின்னலாடைத் தொழில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.பி. முத்துரத்தினம், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில், “பனியன் தொழில் நகரான திருப்பூரில் ஆண்டுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. திருப்பூரில் 90 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள். 10 சதவீதம் மட்டுமே பெரிய நிறுவனங்கள். அவர்கள் சொந்தமாக சோலார் மற்றும் காற்றாலை நிறுவனங்களின் மூலம் மின் கொள்முதல் செய்து தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். எஞ்சிய 90 சதவீதம் பேரும், தமிழக அரசின் மின்வாரியத்தை நம்பியே தொழில் செய்கின்றனர். ஏற்கனவே, 70 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. எஞ்சிய 30 சதவீத நிறுவனங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. தமிழக அரசின் மின் கட்டண உயர்வால், இந்த 30 சதவீத நிறுவனங்களும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். எனவே, திருப்பூர் பனியன் தொழில் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.