நாடாளுமன்றத்தில் காஷ்மீரின் முஸ்லிம் பிரதிநிதி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சாபக்கேடாக இருந்த சட்டப்பிரிவு 370 கடந்த 2019 ஜூலையில் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது.  அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில் சட்டப்பேரவையுடன் கூடிய காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காஷ்மீரின் மலைப்பகுதியில் வசிக்கும் குர்ஜார் பிரிவு மக்கள் தொகை 14.93 லட்சமாக இருந்தது. இதில், குர்ஜார், பகர்வால்ஸ் பிரிவினரில் 99.3 சதவீதம் பேர் முஸ்லிம் மதத்தை பின்பற்றுகின்றனர். காஷ்மீரின் அதிக மக்கள்தொகை கொண்ட பழங்குடியினராக குர்ஜார் மக்கள் உள்ளனர். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதற்கு முன்பு வரை குர்ஜார் பிரிவினருக்கு சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், “இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், காலியாக உள்ள மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவிக்கு குலாம் அலியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்” என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே முதல்முறையாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த குர்ஜார் முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்க உள்ளார்.