கிரீஷ் சந்திர கோஷ் நல்ல நாடகாசிரியர்; கவிஞர்; இயக்குனரும் கூட. அக்காலத்தில் வங்கத்தில் பல நல்ல நாடகங்களை வடிவமைத்தளித்தவர். ஆயினும், இவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. மேலும் பாவச் செயல்களையும் கூடத் துணிந்து செய்யக் கூடியவர். ஸ்ரீராமகிருஷ்ணர் இவரை நல்வழிப்படுத்தினார். 1884 டிசம்பர் 14 அன்று இவர்களுக்குள் நடந்த உரையாடல் கவனத்துக்குரியது:
உலகத்தின் அன்னையிடம் நம்பிக்கை வைத்தால் உனக்கு எல்லாம் கிடைக்கும்!” – ஸ்ரீராமகிருஷ்ணர்.
ஆனால் நான் பாவி ஆயிற்றே!” – கிரீஷ்
பாவத்தைப் பற்றியே நினைத்துப் பேசிக் கொண்டிருப்பவன் பாவியாகத்தான் ஆவான்!”
ஐயா! நான் அமர்ந்த இடம் கூடத் தூய்மை கெட்டுத்தான் போகும்!”
அதெப்படி சொல்கிறாய்? ஒரு அறை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பூட்டப்பட்டதால், அங்கு இருள் மண்டியிருப்பதாக வைத்துக் கொள். ஒருநாள், ஒருவர் அதைத் திறந்து, ஒரு விளக்கை உள்ளே எடுத்துச் செல்கிறார் என்றால், அந்த இருள், அக்கணமே விலகி விடாதா? ஆயிரமாண்டு இருள் என்பதால் விலகாதா? அல்லது விலக அதிக நேரம் பிடிக்குமா?”
நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்!”
கடவுளிடம் வக்காலத்து அல்லது அதிகாரப் பத்திரம் எழுதிக் கொடுத்து விடு! அவர் விரும்புவதை அவர் செய்யட்டும்!”
அதாவது கடவுளிடம் சரணாகதி செய்ய வேண்டும் என்பது பொருள். ஆனால் அதை எளிதில் செய்ய முடிகிறதா? எல்லாம் உன் பொறுப்பு என்று நம்மால் இருக்க முடிகிறதா? இருக்க வேண்டும் என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்