சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டதையடுத்து, அதிருப்தி அணியினர் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளனர். அதிருப்தி அணித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு சிவசேனாவின் மொத்தமுள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் 40 பேரின் ஆதரவு உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் தற்போது வெறும் 15 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உள்ளனர். சிவசேனா எம்.பி.க்களில் பலர், சிவசேனாவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயை வலியுறுத்தி வந்தனர். மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சிவசேனா எம்.பி.க்கள் கூட்டத்தை உத்தவ் தாக்கரே கூட்டினார். இதில் 13 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயை கேட்டுக்கொண்டதாக கட்சியின் மூத்த தலைவர் கஜானன் கிரிதிகர் நிருபர்களிடம் தெரிவித்தார்.