தமிழகத்தில் அறநிலையத் துறையின் கீழ் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களின் பல லட்சம் கோடி மதிப்பிலான பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர். பல கோயில்களின் நிலங்கள் எங்கெங்கு உள்ளன என்ற முறையான ஆவணங்களை அறநிலையத்துறை பராமரிக்கவில்லை. பல இடங்களில் கோயில் நிலங்களை புறம்போக்கு நிலமாகக் கருதி அரசே ஆக்கிரமித்து அலுவலகங்களை அமைத்து பயன்படுத்தி வருகின்றன என்ற நிலையில், தனியார் ஆக்கிரமிப்புகள் குறித்து கேட்கவே தேவையில்லை. அதை அரசும் கண்டுகொள்வதில்லை. நீதிமன்றம் சென்று நீண்ட சட்டப் போராட்டங்கள் நடத்தி அந்த நிலங்களை ஹிந்து சமய அறநிலையத்துறை மீட்க வேண்டியுள்ளது. இந்நிலையில், பயன்படுத்த முடியாத, ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை பொது நோக்கத்திற்காக விற்கலாம், குத்தகைக்கோ, வாடகைக்கோ விடலாம் என ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘கோயில் நிலம் கோயிலுக்கே’ என நீதிமன்றங்கள் கூறிய பிறகும், அவற்றை மீட்டு வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்காமல் விற்பதற்கு அறநிலையத்துறை முடிவெடுத்துள்ளதை ஹிந்துக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.