தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் குழுவிலும் இவர் பணியாற்றியுள்ளார். அப்போது ஏவுகணையை செலுத்த திரவ எரிபொருள் தேவையை முன்கூட்டியே கணித்து அதற்கான ‘கிரையோஜெனிக்’ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். இவர், பாகிஸ்தானுக்கு விஞ்ஞான ரகசியங்களை அளித்ததாக கூறப்பட்ட ஒரு பொய்யான புகாரால் அவர் சி.பி.ஐயால் 1994ல் கைது செய்யப்பட்டார். பின்னர் 1998ல் உச்ச நீதிமன்றத்தால் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இவரது வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் ராக்கெட்ரி: நம்பி விளைவு. நடிகர் மாதவன் இயக்கி, நம்பி நாராயணனாக நடித்துள்ள இந்தப் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், ‘நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் நம்பி நாராயணனின் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலைசிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த படத்தை அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.