பெண் எம்.எல்.ஏக்களுக்கான பயிலரங்கு

பாலினத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆளுமை என்ற தலைப்பில் மகளிர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிலரங்கை தேசிய மகளிர் ஆணையம் நடத்தியது. `மாற்றத்தை உருவாக்குபவள்’ என்னும் பெயரிலான அனைத்து நிலையிலான பெண் பிரதிநிதிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தின் கீழ் இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது. லால் பகதூர் சாஸ்திரி நிர்வாகவியலுக்கான தேசிய நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் பாலினம் மற்றும் குழந்தைகளுக்கான மையத்துடன் இணைந்து தேசிய மகளிர் ஆணையம் இந்த பயிலரங்கை ஜூன் 24 ஆம் தேதி வரை நடத்துகிறது. இந்த பயிலரங்கில் மகளிர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த தலைமைப் பண்பு, உள்ளடக்கிய நிர்வாகம், பெண்கள் கடத்தல் உள்ளிட்ட பாலினம் தொடர்பான குற்றங்கள் குறித்த கண்ணோட்டம் ஆகிய பாலினத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆளுகை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் நாடெங்கிலும் இருந்து 29 பேர் கலந்து கொண்டனர். தொடக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பேசிய உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், தனது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டு மகளிர் சட்டமன்ற உறுப்பினர்களை ஊக்குவித்தார். மேலும், பிரதிநிதியின் வாழ்க்கையில் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா பேசுகையில், அதிகாரம் பெற்ற பெண்கள் தலைமை, அதிகாரம் பெற்ற ஜனநாயகம் என்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, பெண் தலைவர்களுக்கான திறன் வளர்ப்பை ஊக்குவிக்க இந்த பயிலரங்கு நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.