போராட்டத்திற்கு பின் உள்ள சதி

அக்னிபாத் திட்டம் தொடர்பாக தேசமெங்கும் ஒரே சமயத்தில் பல இடங்களில் குறிப்பாக ரயில்களையும் ரயில் நிலையங்களை குறிவைத்து வன்முறை போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டது. ‘ராணுவ ஆர்வலர்கள்’ என்ற பெயரில் சில இளைஞர்கள் வன்முறைகளை திட்டமிட்ட ரீதியில் செயல்படுத்தினர். இதனை சற்று கூர்ந்து ஆய்வு செய்தாலே இது இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டமல்ல, ஒரு திட்டமிட்ட சதி, இதன் பின்னால் ஒரு சதி கும்பல் உள்ளது. அது அமைத்துக்கொடுத்த ‘டூல்கிட்’ படி தான் இந்த வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை யாரும் எளிதில் உணர்ந்துகொள்ளலாம்.

தமிழக ஜல்லிக்கட்டு போராட்டம், டெல்லி விவசாய போராட்டம், டெல்லி சி.ஏ.ஏ வன்முறைகள் என தொடங்கி, சமீபத்தில் நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் வரை ஏராளமான உதாரணங்கள் உள்ளன. இந்நிலையில், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் வன்முறையைத் தூண்டுவதற்கு திட்டமிடப்பட்ட உத்தி வகுக்கப்பட்டது, முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதை வெளிப்படுத்தும் பல ஆடியோ செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனம் இவற்றை வெளிப்படுத்தியுள்ளது.

இதேபோல பீகாரில் நடைபெற்ற கலவரங்களின் பின்னணியில் சச் தக் நியூஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய மனிஷ் காஷ்யப் என்ற பத்திரிகையாளர், யூடியூப்பில் 6.8 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்ட கல்வியாளர் எஸ்.கே.ஜா, ஃபியூச்சர் டைம்ஸ் பயிற்சி மையத்துடன் தொடர்புடைய காஜல் போன்றோர் தங்களது யூடியூப் வீடியோ, பதிவுகளில் இந்த வன்முறையை தூண்டியுள்ளனர் என்பது ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது.

எனவே, மத்திய மாநில அரசுகள், இதில் ஈடுபட்டவர்களை உரிய முறையில் விசாரித்தால் இவர்கள் உண்மையில் ராணுவத்தில் சேர பயிற்சி எடுத்துக்கொண்டவர்களா, இவர்கள் யார், இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார், திட்டமிட்டு கொடுத்த்து யார் என்பது உள்ளிட்ட மேலும் பல உண்மைகள் வெளிவரும். உண்மையாகவே ராணுவத்தில் சேர்ந்து தேசத்தை பாதுகாக்க நினைக்கும் ஒரு நபர் இப்படிப்பட்ட கீழ்தரமான, தேசத்திற்கெதிரான சம்பவங்களை ஒருபோதும் செய்யமாட்டார், கனவிலும் நினைக்க மாட்டார்கள் என்பது திண்ணம். எனவே, இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணுவ அமைச்சகமும், முன்னாள் ராணுவ ஜெனரல் வி.கே.சிங், முன்னாள் தளபதி வி.பி மாலிக ஆகியோர் கூற்றுப்படி இந்த சமூக விரோதிகள் இந்திய ராணுவத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர்கள் என்று தடை செய்ய வேண்டும்.

மதிமுகன்