மே 27 முதல் ஜூன் 11 வரை ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 110வது அமர்வில் மிகப்பெரிய தொழிலாளர் அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்) கலந்துகொண்ட்து. இந்த மாநாட்டில், கத்தாரில் பணிபுரியும் பாரத்த்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்த கவலைகளை பி.எம்.எஸ் எழுப்பியது. இது தொடர்பாக ஜூன் 14ல் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கத்தாரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மீதான ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்கள் குறித்து பி.எம்.எஸ் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொள்வது, கூடுதல் நேர வேலை, தங்கியிருக்கும் இடத்தை விட்டு வெளியேற அனுமதி மறுத்தல், மிகச்சிறிய தங்குமிடங்கள், பாலியல் துஷ்பிரயோகம், கட்டாயப்படுத்தப்பட்ட வேலை போன்றவை தொழிலாளர்களுக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கின்றன’ என்று தெரிவித்துள்ளது. மேலும், ‘அனைத்து தொழிலாளர்களுக்கும் நல்ல, ஆரோக்கியமான பணிச்சூழல் வழங்கப்பட வேண்டும். அவர்களின் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். எதாவது காரணத்துக்காக ஒரு தொழிலாளி இறந்தால், இறந்தவரின் சடலத்தை உடனடியாக அந்நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும், அதற்கான செலவை கத்தார் அரசு அல்லது மனிதவள விநியோக நிறுவனம் ஏற்று உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மனிதவள ஏஜென்சிகளில் ஏதேனும் விதிமீறல்கள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியுள்ளது. ‘கத்தார் அரசு இந்த பிரச்சனைகளில் நேர்மறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பி.எம்.எஸ் இந்த பிரச்சினையை தேசிய மற்றும் சர்வதேச மன்றங்களில் விரைவில் எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும்’ எனவும் எச்சரித்துள்ளது. கத்தாரில் உள்ள புலம்பெயர்ந்த பாரதத் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என, பாரதத்துக்கான கத்தார் தூதர், இந்திய தொழிலாளர் அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றிடம் பி.எம்.எஸ் கோரியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கத்தார் அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய தேசிய குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வெளியேறும் அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ளது.