கற்பழிப்பவனுக்கு  தூக்கு

முதல் குற்றவாளி சமுதாயமா, அரசா? பாலியல் வன்புணர்வு (ரேப்)க்கான இது ஒரு பெரிய தலைப்பு! நீண்டு விவாதிக்கப்பட வேண்டியது! இன்று அத்தனை தலைப்புச் செய்தி! நரேந்திர மோடி அரசின் தலைக்கு விலை பேசும் விளம்பர தலைப்பு! முதலில் இந்த ரேப் ‘மதச்சாயம்’ பூசப்பட்டு அவை ‘செலக்டிவ்’ ஆக முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதாகவும், ‘இந்துவெறி’ நரேந்திர மோடி அரசே இதற்குக் காரணம் என்றும் ‘சம்பளம் பெறும்’ மீடியாவால் விமர்சிக்கப்பட்டது! இதற்கு அரசுதான் காரணமா, என்றால் எவ்வளவு பங்கு, இல்லை வேறு யார் காரணம்? என்பதை விவாதிப்போம்!

தமிழ்நாட்டின் குற்றப்பிரிவில் பணிபுரிந்து அதிக அனுபவம் வாய்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரியின் தகவல் படி பாலியல் வன்புணர்வுகளை” அதாவது ‘ரேப்’பை மூன்றுவகையாகப் பிரிக்கலாம்! இதுவரை பதிவான ரேப் புள்ளிவிவரங்கள்:

18 வயதுக்கு உட்பட்ட ஆண் / பெண் சிறுவர் சிறுமியர், Infatuation  என்ற உடல்ரீதியாக ஈர்க்கப்பட்டு அறியாத வயதில் தெரியாமல் ஈடுபடும் உடல் உறவுகள். 18 வயதுக்குக் கீழ் என்பதால் இது குற்றம் மற்றும் ரேப் ஆகிறது. சுமார் 30 சதம் இம்மாதிரி நிகழ்வுகள் நடைபெறுகிறது.

18 வயதுக்கு மேற்பட்ட ஆண் / பெண் காதல் வயப்பட்டு காமவயப்பட்டு, கொள்ளும் உறவுகளும் 30 சதவீதம். இவை பின்னால் திருமண ஆசைகாட்டி கொள்ளும் உறவு, இரு பக்கமும் திருமணம் செய்துகொள்ளும் போது வாபஸ் பெறப்படுகிறது.

5 லிருந்து 10 சதவீத ரேப்கள் மட்டுமே கொடுமையான வக்கிரமான ‘மைனர்’ அல்லது குழந்தைகள் ரேப்.

முதல் 60 சதவீதம் ரேப்களுக்கு யார் காரணம்? சமூகமா? அரசா? நரேந்திர மோடியா? பாஜகவா?

மீதமுள்ள 30 சதவீத ரேப்களில் கூட பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்குத் தெரிந்தவர்களாலேயே வன்புணர்வு கொள்ளப்படுகிறார்கள்.

அதிகாரி சொன்ன அதே கருத்தை இன்றைய குற்றவியல் ஆவணக் காப்பகம் 2016ம் உறுதி செய்கிறது! நான் அதன் புள்ளிவிவரங்கள் தருகிறேன். அதை நம் மூளையில் ஏற்றி வைத்த பிறகு ரேப்புக்கும் நரேந்திர மோடி அரசுக்கும் உள்ள சம்பந்தம் புரியும்.

2016ம் ஆண்டு நடந்த ரேப் எண்ணிக்கை 38,947. இதில் 36,859 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளியை ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது 95 சதவீதம் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்களே குற்றவாளிகளாக இருந்துள்ளனர். இதில் மோடி எங்கே வந்தார்? அவர் ஏன் வாய்திறக்க வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள்!

இதனுடைய பகுப்பு விவரம் கொடுக்கிறேன். தயவு செய்து படியுங்கள். இதைப் பார்த்த பிறகு இம்மாதிரி ரேப்களுக்கு நாம் எவ்வளவு காரணம்? நம் குடும்பம் எவ்வளவு காரணம்? நம் பெற்றோர் ஆசிரியர், சூழ்நிலை எவ்வளவு காரணம் என்பது விளங்கும். மேற்சொன்ன வழக்கு எண்ணிக்கையில் அதாவது 36,859ல் 630 வழக்குகளில் தாத்தா, அப்பா, மகன், சகோதரன் காரணம்! இது மிகவும் வெட்ககரமான புள்ளிவிவரம். சமூகத்தின் கொடுமை! தேசத்தின் மாண்புக்கு இழுக்கு! 1087 பேர் நெருங்கிப் பழகுபவர்கள். 2174 பேர் உறவுக்காரர்கள், 10,520 பேர் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், 10,068 கல்யாண ஆசை காட்டிய உடல் உறவுகள், 11,223 பேர் ஏதோ ஒரு வகையில் அறிமுகமானவர்கள்.

இந்தப் புள்ளிவிவரம் அதிர்ச்சி அளிக்கிறது இல்லையா?

நம்முடைய உறவு முறையில், சுற்றுச் சூழலில், அக்கம்பக்கத்தில் இந்த கேடு நடைபெறுகிறது என்றால், நம்முடைய விழுமியங்கள் / பண்புகள் எனப்படும் ஆதார விஷயங்களில் கீறல் விழ ஆரம்பித்திருக்கிறது என்று அர்த்தம்!

நம் குடும்ப அமைப்பில் ஏற்பட்ட சிதைவு, வீட்டுக்குள்ளே கொண்டு நாம் அமர்த்தி அழகு பார்க்கும் டிவி, இன்டர்நெட், ஆண்ட்ய்ராட் போன் என்னும் எமன்களின் கைவரிசை, பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் மதச்சார்பின்மை காரணமாக நீக்கப்பட்ட கொடுமை, குழந்தைகளை நேரடி கண்காணிப்பில் வைக்காத குடும்பங்களின் கையாலாகத்தனம் என அடுக்கிக் கொண்டே போகலாம்!

இதைத்தான் நரேந்திர மோடி பிரதமரான பின்பு இரண்டு முறை கூறியுள்ளார்.

பெண் குழந்தைகளை வெளியே போகாதே எனக் கட்டுப்படுத்தும் பெற்றோர், ஆண் குழந்தையை ‘ஏன் லேட்டாக வருகிறாய்’ என எப்போதாவது கேட்டோமா? எனக் கேட்டாரே ஞாபகம் இருக்கிறதா?

ரேப் பற்றி ஒரு புள்ளிவிபரம் சொல்லி அதை பாஜக ஆட்சியில் அதிகமாகி விட்டது எனச் சென்ற மாதம் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியபோது, மோடி சொன்னார்:

ஒரு குழந்தை வன்புணர்வு செய்யப்பட்டால் அதை மற்ற அரசின் ஆட்சியில் நடந்த எண்ணிக்கையோடு ஒப்பிடக்கூடாது. ‘இக்கொடுமை கொடுமைதான்’ இதை நாம் எப்படி ஏற்கமுடியும்? சமீபத்தில் நடைபெற்ற இந்தப் பாலியல் வன்கொடுமை வெட்ககரமானது.” என்றார். இதோடு நிறுத்திக் கொள்ளாமல் நாம் மேலே வாசித்த புள்ளிவிவரங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு தந்தையின் பரிவோடு சொல்கிறார்:

இந்தியாவில் பெண்களே கேள்விக்குள்ளாக்கப்படுகிறார்கள். இக்குற்றங்கள் செய்பவனும் யாரோ ஒருவரது மகன்தான். அப்பெண்ணை ரேப் செய்வது மிகப் பெரும் கொடுமை வெட்ககரமானது, தேசத்துக்கு அவமானகரமானது”.

இவ்வாறு சமூகத்தில் குடும்பத்தின் பொறுப்பை மக்களுக்கு எடுத்துச் சொல்கிறார். இது இத்தாலிச் காரர்களுக்கு புரியாது. இந்திய ரத்தமே இதை உணர முடியும். ஆதனால் காங்கிரஸ்காரர்கள் கேலிதான் பேசுவார்கள்.

நீதி உறுதியாக நிலை நிறுத்தப்படும். குற்றவாளிகள் தப்ப முடியாது என்பதையும் உறுதிப்பட கூறியுள்ளார். இது வார்த்தை ஜாலமல்ல என்பதற்கு உதாரணம் நம் கண்முன் இரண்டு.

பாஜக ஆளும் ஹரியானா மாநிலம். குர்மீத் ராம் ரஹிம் என்கிற ஆடம்பர சாமியார். லட்சக்கணக்கில் வெறி பிடித்த பக்தர் கூட்டம் அந்த ஆசிரமத்தில் நடைபெற்ற ஒரு ரேப்ஐ, அதுவும் குர்மீத் ராம் ரஹிம் மீதானதை, ஒரு மொட்டைக் கடிதமாக, அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு எழுதியதை ஆதாரமாக வைத்து புலன்விசாரணை செய்து வழக்குப் போட்டு அசைக்க முடியாத அந்த ஆசாமி இன்று ரோதக் சிறைச்சாலைக்குள் என்பது பாஜகவினால் மட்டுமே முடியும்.

சென்ற வாரம் ஆசாராம் என்கிற மிகப் பெரிய 77 வயது சாமியார் 16 வயது பக்தையை சிதைத்தார். உயிருள்ள வரை சிறைவாசம் உறுதி செய்தது ராஜஸ்தான் கோர்ட். இதுவும் மோடியின் ஆட்சியில்.

ஆனால் காசியாபாத் மதரசா மௌல்வி கீதா என்கிற 10 வயது ஹிந்துப் பெண்ணை சிதைத்ததை மீடியாக்கள் அடக்கி வாசித்தாலும் ஏப்ரல் 22 அன்று 12 வயதுக்குட்பட்ட ஆண் / பெண் சிறார்களை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை என அவசரச் சட்டம் பிறப்பித்தது மத்திய அரசு.

மற்றவர்களுக்கு இக்குற்றத்திற்கான தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்தியுள்ளது.

ஆக அரசின் கடமையை, ஆட்சியின் திறனை மோடி நிரூபித்துக் காண்பித்த பிறகு, பாலியல் வன்புணர்வுக்கு” காரணம் சமூகம் என்பதை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

இடையில் நான் 5-10 சதவீதம் பங்குள்ள கொடுமையான, வன்மமான, பாலியல் வன்புணர்வு சிறார்கள் மீது நடத்தப்படுவதைக் குறிப்பிட்டிருந்தேன். இவைகளுக்கு காரணமென்ன?

2 மாதம் முன்பு தஷ்வந்த் என்னும் பட்டதாரி இளைஞன் ஹாசினி என்ற பக்கத்து வீட்டு 8 வயது சிறுமியை சிதைத்துக் கொன்றறான். அதிலும், அதற்கு முன் நடைபெற்ற பல்வேறு சிறார் கற்பழிப்புகளிலும் குற்றவாளிகள், ஆபாச வீடியோ பார்ப்பவன் என்பதும் மது போதை மருந்துக்கு அடிமைகள் என்பதும், மிகப் பெரும்பாலான சிறார் வன்புணர்வுக்கு இவைகளே பெருமளவு காரணம் என்பதும் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்!

ஆக, இவ்வளவு சமூக ஓட்டை உடைசல்களை நாம் வைத்துக்கொண்டு அவைகளை சரிசெய்ய முயற்சிக்காமல், இன்னும் சொல்லப்போனால், நம்முடைய பலவீனங்களை அறியாமல் ஒரு மயக்க நிலையில், மறந்த நிலையில் இருந்து கொண்டு, நரேந்திர மோடி அரசைக் குற்றம் சாட்டுவது, இப்பாதகச் செயலை வேரறுப்பதற்கான தீர்வாகாது!

 

சட்டம் குற்றத்தைக் குறைக்கும்

 சமுதாயத்தின் பண்பு தழைக்குமா?

சிறுமிகளிடம் பாலியல் வக்கிரம் செய்பவர்களுக்கு கால தாமதம் செய்யாமல் சட்டத்தில் கூறப்பட்ட தண்டனையை வழங்கினால் தான் இந்த வகை குற்றம் குறையும். தவறு செய்பவர்களுக்கு ஒரு பயம் வரும். சிறுமிகள் அப்பாவிக் குழந்தைகள். அதனால் அவர்கள் மீது தாக்குதல் செய்பவர்களுக்கு மரணதண்டனை (தூக்கு) தான் சரியான தண்டனை. 13 வயதிற்கு மேல் உள்ள பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டாலும் என்ன தண்டனை என்றும் வரையறுத்திருக்கிறார்கள். அதையும் கால தாமதமில்லாமல் நிறைவேற்றினால் சமூகத்தில் இப்படிப்பட்ட கேடுகள் நடப்பது குறையும்.

இதற்கு முக்கிய காரணம் தொலைக்காட்சி தொடர்கள், ஆபாச வலைதளங்களின் பங்களிப்பு, வாட்ஸ் அப் மூலம் வரும் சில தகவல்கள். அது சமுதாயத்தைக் குறிப்பாக இளம் தலைமுறைகயை சீரழித்து வருகின்றது. இதற்கு ஒரு தடுப்பு அவசியம். லட்சுமணன் போட்ட கோடு, ஞாபகமிருக்கிறதா?

பெண்களை மரியாதைக்குரியவர்களாகவும், தெய்வங்களாகவும் போற்றும் வந்த நாட்டில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பது மகா கேவலம். பெண்களை மதிக்கும் குடும்பமும் தேசமும் தான் நன்றாக இருக்கும். அதனால் தான் வியாசர் எழுதிய பவிஷ்ய புராணத்தில். பெண்கள், பசுக்கள், அந்தணர்கள், வேதங்கள் பொக்கிஷம் போல் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். இன்று சிறுமிகள் மட்டுமல்லாமல் எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்தச் சட்டம் மூலம் அத்தகைய குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டாகலாம்.

மேலைய நாட்டுக் கலாசாரத்தின் தாக்கமும் இதற்கு ஒரு காரணி. பெண்களை போகப் பொருட்களாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள். அது நமது நாட்டிலும் பரவி விட்டது. நம் வீடுகளில் குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெண்களை ஆண்கள், ஏன் தந்தை/அண்ணன் கூடத் தொடுவதற்கு அனுமதி கிடையாது. அப்படிப்பட்ட பாரம்பரியம் நமது இன்று அதையெல்லாம் நாம் பின் பற்றுவதில்லை. அதனால் தான் நமது சமுதாயத்தில் சீரழிவு தொடர்கிறது. மத்திய அரசின் இந்த அவசரச் சட்டம் மூலம் குற்றங்கள் குறைந்து பெண்கள்/சிறுமிகளுக்கு பாதுகாப்பு ஏற்பட்டால் தான் நமது சமுதாயமும், தேசமும் பாதுகாக்கப்படும். எந்தவித விதிவிலக்கும் இல்லாமல் இந்தச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.

– அஸ்வினி