நாகாலாந்திலிருந்து வந்திருந்த மாணவி பிரதிநிதிகள் குழுவை லோக் கல்யாண் மார்கில் உள்ள தமது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துப் பேசினார். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ முன்முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பிரதிநிதிகள் குழு டெல்லி வந்துள்ளது. பிரதமரை சந்தித்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். வடகிழக்குப் பகுதிகளுக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வை, நாகாலாந்தில் அவரது அனுபவங்கள், யோகாவின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாணவிகள் பிரதமருடன் விவாதித்தனர். இந்தக் கலந்துரையாடலின் போது, டெல்லி பயணத்தில் பல்வேறு சுற்றுலா தலங்களைச் சென்று பார்த்தது குறித்த அவர்களது அனுபவங்களை மாணவிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார். பிரதமர்களின் அருங்காட்சியகம் மற்றும் தேசிய போர் நினைவுச் சின்னத்தைப் பார்வையிடுமாறும் பிரதமர் அவர்களிடம் கூறினார். பிரதமருடனான இந்த சந்திப்பிற்கு தேசிய மகளிர் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.