விண்வெளித் துறை சீர்திருத்தம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 10 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை மத்திய அரசின் விண்வெளித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு முதலீட்டை 1,000 கோடி ரூபாயிலிருந்து 7,500 கோடி ரூபாயாக அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துக்கு தன்னாட்சி நிதி அதிகாரம் வழங்கப்படும் என்றும் பெருமளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விண்வெளித்துறையில் உள்நாட்டுப் பொருளாதார நிலை மேம்பட்டு சர்வதேச விண்வெளி சந்தையில் பாரதத்தின் பங்கு அதிகரிக்கப்படும். இந்த விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் மூலம், நியூ ஸ்பேஸ் நிறுவனத்தை முழுமையான வணிக விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முழு அளவிலான செயற்கைக்கோள் இயக்குநராக செயல்படவும் வழிவகை ஏற்பட்டுள்ளது. ஒற்றைச் சாளர இயக்குநராக செயல்படும் இந்த நிறுவனம், விண்வெளித் துறையில் எளிதாக வர்த்தகம் செய்ய முடியும். இதன் மூலம் உலகளாவிய நிலைகளுக்கு ஏற்ப டிரான்ஸ்பாண்டர்களின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் பெறும்.