ஐதராபாத்தில் இந்திய தொழில் வர்த்தக பள்ளியின் 20 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டார். அதற்கு முன்னதாக ஐதராபாத்தில் நடைபெற்ற பேரணியின்போது பா.ஜ.க தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், ‘தெலுங்கானாவில் குடும்ப கட்சிகள், தங்கள் வளர்ச்சியை மட்டுமே நினைக்கின்றனர். ஏழை மக்களைப் பற்றி கவலைப்படாத இக்கட்சிகள், ஒரே குடும்பம் எவ்வளவு நாள் ஆட்சியில் இருக்க முடியுமோ, அவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதில்தான் கவனம் செலுத்துகின்றன. மக்களின் வளர்ச்சியில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. குடும்ப அரசியல் என்பது அரசியல் ரீதியான பிரச்சினை மட்டுமல்ல. ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி. ஒரு குடும்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகமாக ஊழல் எப்படி மாறுகிறது என்பதை நம் நாடு பார்த்திருக்கிறது. தெலுங்கானாவிலும் பாஜகவினர் அரசியல் ரீதியாக குறி வைக்கப்படுகிறார்கள். இவர்களிடம் இருந்து தெலுங்கானாவை காப்பாற்ற வேண்டும். பா.ஜ.க தெலுங்கானாவை தொழில்நுட்ப மையமாக மாற்ற விரும்புகிறது. எனக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நம்பிக்கை உள்ளது. மூடநம்பிக்கையில் நம்பிக்கை இல்லாத துறவியான யோகி ஆதித்யநாத்தையும் வாழ்த்துகிறேன்’ என கூறினார்.