குவாட் தரும் புதிய மாற்றங்கள்

ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் சில …

குவாட் கடல்சார் பாதுகாப்பு முயற்சி: குவாட் நாடுகள் இணைந்து கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மை உட்பட பல முயற்சிகளை தொடங்க உள்ளன. இதன்படி, பசிபிக் தீவுகள், தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள கடல்களில் நடைபெறும் சட்டவிரோத மீன்பிடித்தல், சட்டவிரோத கப்பல் போக்குவரத்து, நடுக்கடலில் கப்பல்களில் செய்யப்படும் சட்டவிரோத சரக்கு பரிமாற்றம், போதைபொருட்கள், ஆயுதக் கடத்தல் ஆகியவற்றை தடுக்க இந்த நாடுகள் நடவடிக்கைகள் எடுக்கும்.

உலக சுகாதார அமைப்பு மேம்பாடு: கொரோனா தொற்றுநோய் தடுப்பு, தடுப்பூசி உற்பத்தித் திறன், உலகளாவிய சுகாதார பாதுகாப்பை மேம்படுத்துவதில் குவாட் நாடுகள் அதன் உலகளாவிய தலைமையை பராமரிக்க உறுதிபூண்டுள்ளன. இந்தோ பசிபிக் நாடுகள் உட்பட, மிகவும் தேவைப்படும் நாடுகளுக்கு, கொரோனா பூஸ்டர் டோஸ், குழந்தைகளுக்கான தடுப்பு மருந்துகளை அமெரிக்கா வழங்கும். பாரதத்தில் உள்ள பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் தடுப்பு மருந்துகள் குவாட் தடுப்பூசி கூட்டாண்மையின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படும். சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி பாரதத்தின் எக்ஸிம் வங்கி ஆகியவை 100 மில்லியன் டாலர்களை இதற்கு அளிக்கும். இது கொரோனாவுக்கு எதிர் நடவடிக்கைகளுக்கான உலகளாவிய திறன் உட்பட பாரதத்தின் சுகாதாரத் துறையையும் மேம்படுத்தும்.

குவாட் பெல்லோஷிப்: குவாட் நாடுகள் இணைந்து ‘குவாட் பெல்லோஷிப்’ திட்டத்தை துவக்கும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் 100 பாரத, அமெரிக்க, ஆஸ்திரேலிய, ஜப்பானிய மாணவர்கள் அமெரிக்காவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் பட்டதாரி பட்டப்படிப்புகளைப் படிக்க ஸ்பான்சர் செய்யப்படும்.

காலநிலை நெருக்கடி: காலநிலை நெருக்கடியைச் சந்திப்பதில் நான்கு குவாட் நாடுகளும் அர்த்தமுள்ள வகையில் ஆழமான மற்றும் நெறிப்படுத்தப்பட்ட ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. குவாட் நாடுகள், பசுமைக் கப்பல் போக்குவரத்து, ஆற்றல் விநியோகச் சங்கிலிகள், பேரிடர் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் காலநிலை தகவல் சேவைகளின் பரிமாற்றம் ஆகியவற்றில் மேலும் முயற்சிகளைத் விஸ்தரிக்க முயற்சிகளை முன்னெடுக்கும்.

தொழில்நுட்ப கூட்டு: வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பொறுப்பான கண்டுபிடிப்புகளுக்கு குவாட் நாடுகள் உறுதிபூண்டுள்ளன. முன்னதாக, மார்ச் 2021ல் குவாட் உச்சிமாநாட்டில் முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பணிக்குழு தொடங்கப்பட்டது. அதில், குவாட் கூட்டமைப்பு நாடுகள், உலகளாவிய குறைக்கடத்தி விநியோகச் சங்கிலிகளில் உள்ள கூட்டுத் திறன், சிக்கலான தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகள் பற்றிய பொதுவான கொள்கைகளை வெளியிட்டன. இந்த அடித்தளத்தில், குவாட் நாடுகள் பிராந்தியத்தில் திறந்த மற்றும் பாதுகாப்பான தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் ஒத்துழைப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றன.

சைபர் செக்யூரிட்டி பார்ட்னர்ஷிப்: குவாட் சைபர் செக்யூரிட்டி பார்ட்னர்ஷிப் மூலம் இணையவழி பாதுகாப்பு, பாதிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் நான்கு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளன.

விண்வெளித்துறை ஒத்துழைப்பு: விண்வெளி துறையில் குவாட் நாடுகள் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, செயற்கைக்கோள் தரவுகளை பரிமாறிக்கொள்வது, திறன்களை வளர்ப்பது, விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களில் கூட்டு நிபுணத்துவத்தை ஒருங்கிணைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

13 நாடுகள் கூட்டமைப்பு: இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பாரதம், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007ல் உருவாக்கியது ‘குவாட்’ அமைப்பு. தற்போது இதே காரணத்துடன் இணைந்து பொருளாதாரம்,பாதுகாப்பு, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு என்ற பல்வேறு காணங்களை கருத்தில் கொண்டு, 13 நாடுகள் கூட்டமைப்பு ஒன்று புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இதில் பாரதம், அமெரிக்கா,  ஜப்பான், ஆஸ்திரேலியா, புருணே, இந்தோனேசியா, தென்கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 13 நாடுகள் இணைந்துள்ளன. உலக பொருளாதாரத்தில் சுமார் 60 சதவீதத்தை இந்த புதிய கூட்டமைப்பு நாடுகள் கொண்டுள்ளன. இதனால், இதில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் அதிவேகமாக வளர்ச்சி அடையும்.

மேலும், குவாட் நாடுகளின் பணிகளில்  உள்கட்டமைப்பு பாதுகாப்பு துறையில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துவது, வினியோக சங்கிலி மற்றும் பாதுகாப்பில் பாரதம் தலைமையேற்பது, தொழிலாளர் வளர்ச்சி மற்றும் திறமைகளை ஜப்பான் தலைமையில் செயல்படுத்துவது, மென்பொருள் பாதுகாப்பு தரநிலைகளில் அமெரிக்கா முன்நின்று செயல்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.