புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ‘மதராசா என்ற வார்த்தை இருக்கும் வரை குழந்தைகள் டாக்டர், இன்ஜினியர் ஆவது பற்றி யோசிக்க முடியாது. அனைத்துக் குழந்தைகளுக்கும் அறிவியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய அனைத்து பாடங்களைக் கற்பிப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். மாணவர்கள் டாக்டர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகளாக ஆவதை இலக்காகக் கொண்டு படிக்க வேண்டும். மதரசாக்களில் படித்தால் டாக்டரோ, இன்ஜினியரோ ஆக மாட்டார்கள் என்று சொன்னால், அவர்களே செல்ல மறுப்பார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் வீட்டில் குர்ஆனைக் கற்றுக் கொடுங்கள். குழந்தைகளை மதரசாக்களில் சேர்ப்பது என்பது உண்மையில் அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும்’ என்றார். குர்ஆனின் எந்த வசனத்தையும் எளிதில் மனப்பாடம் செய்யக்கூடிய முஸ்லிம் குழந்தைகளின் நினைவாற்றல் கூர்மையாக இருப்பதாகக் கூறும் கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘அனைத்து முஸ்லிம்களும் ஹிந்துக்கள்தான். பாரதத்தில் யாரும் முஸ்லினாகப் பிறக்கவில்லை. பாரதத்தில் உள்ள அனைவரும் ஹிந்துக்கள். எனவே ஒரு முஸ்லீம் குழந்தை மிகவும் தகுதியானவராக இருந்தால், அவரது கடந்த காலத்தில் அவர் ஹிந்துவாக இருந்ததற்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும்’ என கூறினார். முன்னதாக அசாம் அரசு, கடந்த 2020ல் அசாமில் உள்ள அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்களையும் வழக்கமான பள்ளிகளாக மாற்றும் சட்டம் இயற்றியது. இது ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வந்தது.