இந்திய தொழில் கூட்டமைப்பின், தென் மண்டல பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட தக்ஷின் – தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு உரையாற்றுகையில், ‘உலக அளவில் திரைப்படத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் பாரதமும் ஒன்று. ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. அவை உலகம் முழுவதும் சென்றடைகின்றன. ஹாலிவுட் திரைப்படங்களும் தயாரிப்பிற்குப் பிந்தைய பணிகளுக்காக பாரதம் வந்துள்ளன. வெள்ளித் திரை, மல்டிபிளக்ஸ்கள், தொலைக்காட்சி, செல்போன்கள், டி.டி.எச், ஓ.டி.டி போன்ற பல்வேறு தளங்கள் பார்வையாளர்கள் தெரிவு செய்யும் வகையிலும், ஆக்கப்பூர்வமான தொழில்முனைவோருக்கு விருப்பமானவற்றை தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது. நாட்டின் 75வது சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, திரைப்படத் துறையில் சிறந்து விளங்கும் 75 புதிய திறமையாளர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. திரைப்படத் துறையை எளிதாக்குவதற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. திரைப்பட வசதிகளுக்கான ஒற்றைச் சாளர அனுமதி அமைப்பு முறையும் அதில் ஒன்று என்றும் அவர் தெரிவித்தார். நமது தயாரிப்பாளர்களுடன் இணைந்து திரைப்படத்தை தயாரிப்பதற்காக 15 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன’ என்று தெரிவித்தார்.