மஹாகாளி யாகத்தில் அகோரிகள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரும் மே 6 முதல் 16 வரை பாலபத்ரா கோயிலில் நடைபெறும் ‘மஹாகாளி யாகத்தில்’ அகோரி சன்யாசிகளின் கூட்டம் பங்கேற்கிறது.  இந்த யாகத்தில் மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பாரதம், வெளிநாடுகளைச் சேர்ந்த பல பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என  இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.  மஹாகாளி யாகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், மகாகால பைரவா அகடாவின் அகில பாரதப் பொதுச் செயலாளருமான ஆனந்த் நாயர்,  இதுகுறித்து கூறுகையில், “மகா காளி யாகத்தில் பங்கேற்க தென் பாரதத்திற்கு முதன்முறையாக அகோரி சன்யாசிகள் வருகிறார்கள். அகோரி வழிபாட்டு முறை பாரதத்தில் 5,000 ஆண்டுகளுக்கும் மேலான பரம்பரையைக் கொண்டுள்ளது. இந்த சன்யாசி குழுவின் இருப்பு யாகத்தை வேறு நிலைக்கு உயர்த்தும்.  நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு துறவிகளின் குழுக்கள் இந்த யாகத்தில் பங்கேற்கின்றன. மூகாம்பிகை கோயிலின் தலைமை அர்ச்சகர் ராமச்சந்திர அடிகா யாகத்தின் முக்கிய ‘ஆச்சார்யா’ ஆவார். சமுதாயத்தின் ஒட்டுமொத்த செழிப்புக்காகவும் நல்வாழ்வுக்காகவும் இந்த யாகம் நடத்தப்படுகிறது’ என தெரிவித்தார்.