திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா முறியாண்டம் பாளையத்தில் கன்னிமார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 3.61 ஏக்கர் நிலம் மற்றும் தத்தனூர் அடிபெருமாள் கோயிலுக்கு சொந்தமான 10.25 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தன. மேலும் தண்டுக்காரன் பாளையம், தொட்டியனூர் முட்டத்துராயர் கோயிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம், தொட்டக்களம்புதூர் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 7.32 ஏக்கர் நிலம், கருவலூர் தர்மராஜா கோயிலுக்கு சொந்தமான 3.94 ஏக்கர் நிலம் ஆகியவையும் ஆக்கிரமிப்பில் இருந்தன. அந்நிலங்களின் மொத்த மதிப்பு ரூ. 14.28 கோடி. 31.12 ஏக்கர் பரப்பளவிலான இக்கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்யவில்லை. இதையடுத்து அந்நிலங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்தி அங்கு அறிவிப்பு பலகை வைத்தனர்.