மனத்தின் குரல்

இந்த ஆண்டின் முதல் ‘மனத்தின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘ஜனவரி 30 மஹாத்மா காந்தியின் கொள்கைகள் குறித்து நமக்கு நினைவூட்டுகின்றன. இந்த ஆண்டு நேதாஜியின் பிறந்தநாள் தினத்தன்று குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் துவங்கியது. இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் டிஜிட்டல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாடு இதனை வரவேற்றதை நாம் மறக்க முடியாது. அமர்ஜவான் ஜோதியில் உள்ள ஜோதி, தேசிய போர் நினைவிடத்தில் இணைக்கப்பட்டதை நாம் பார்த்தோம். இந்த உணர்ச்சிகரமான நாளில், நமது தேசத்தின் மக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் அனைவரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர். ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தங்களின் மனத்தின் குரல் நிகழ்ச்சியை அஞ்சல் அட்டை மூலம் எனக்கு அனுப்பியுள்ளனர். இது நமது எதிர்கால தலைமுறையின் பரந்த, விரிவான கண்ணோட்டத்தை எடுத்து காட்டுகிறது. இந்தாண்டு பத்ம விருதுக்கு, அதிகம் வெளியே தெரியாதவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

கல்வி குறித்த விழிப்புணர்வு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தின், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வசிக்கும் தாயம்மாள் நமக்கு முன்மாதிரியாக உள்ளார். அவருக்கென்று சொந்தமாக எந்த நிலமும் இல்லை. இளநீர் விற்றே அவரது குடும்பம் வாழ்கிறது. அவரது நிதிநிலையும் சிறப்பானதாக இல்லை. ஆனால், தனது குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க அவர் பாடுபட்டார். அவரது குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடைபெற்றது. அதில், பள்ளியின் தரம் உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், பணப் பிரச்சனை காரணமாக பேச்சுவார்த்தை தடைபட்டது. இதனை கண்ட தாயம்மாள், இளநீர் விற்றதில் சேமித்த ரூ.1 லட்சத்தையும் பள்ளிக்கு நன்கொடையாக அளித்தார். தாயம்மாளின் இந்த செயலை யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். இதனை செய்ய மிகப்பெரிய மனதும், மிகப்பெரிய சேவை செய்யும் தன்மையும் தேவை.

கொரோனாவின் புதிய அலையை எதிர்த்து பாரதம் போராடி வருகிறது. 4.5 கோடி குழந்தைகளுக்கும் தடுப்பூசியும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது. இது பெருமையளிக்கும் விஷயம். நமது தடுப்பூசி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே, நமது பலத்திற்கு முக்கிய காரணம்’ என கூறினார்.