ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், சமீபத்தில் திருச்செந்தூர் முருகப்பெருமான் சேவையில் 900 ஆண்டுகளாக இயங்கி வரும் பழமைவாய்ந்த அனைத்து கவுண்டர் மடத்தை மூடி சாவியை ஓப்படைக்க அந்த மடத்திற்கு உத்தரவு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கவுண்டர் மடத்தின் முன்பாக தடுப்பையும் ஹிந்து சமய அறநிலையத்துறை போட்டு மறைத்துள்ளது. இதற்கு கவுண்டர் இன மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கவுண்டர் இன மகளான ஸ்ரீ தெய்வானைக்கு சீதனமாக ஸ்ரீ சுப்பிரமணிய கடவுளுக்கு கவுண்டர்கள் 25 விலக்கடி நிலம் அளித்துள்ளனர். சுப்பிரமணிய பெருமானுக்கு 2,000 வருடங்களுக்கு முன் மயில் வாகனம் அளித்துள்ளனர். மேலும் பல்வேறு கைங்கர்யங்கள், தர்ம காரியங்கள் செய்துள்ளனர். அவர்கள் அளித்த மயில் வாகனம் உட்பட பல பொருட்கள் தற்போது காணாமல் போய்விட்டன என்பது வேதனைக்குரிய விஷயம். இந்நிலையில், ஆணையர் தன் கடிதத்தை திரும்பப் பெற வேண்டும், 25 விலக்கடி நிலத்தை திருப்பி அளிக்க வேண்டும், கவுண்டர் மடத்தின் முன்பு போடப்பட்டுள்ள தடுப்பை நீக்க வேண்டும் என கவுண்டர் இன மக்கள், பல்வேறு ஹிந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், தமிழக முதல்வரும் ஹிந்து அறநிலையத்துறையும் இவ்விஷயத்தில் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து கவுண்டர்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து உள்ளனர்.