‘விடியல்’ அரசின் அதிகார துஷ்பிரயோகம் – தேவை சட்ட ஆலோசனை

தவறுதலாகக் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிற்கும் ஓர் இளைஞர் தன்னைக் குற்றமற்றவர் என நிரூபித்தால் விடுதலை பெறலாம்; தவறினால் ஆயுள் முழுவதும் சிறை ஆண்டுகள் வாசம். ஆனால் தவறை ஒப்புக் கொண்டால் வெறும் ஆறு தண்டனை, அதன் பின் ஆயுள் முழுவதும் குற்றப் பின்னணி நிழலில் வாழ வேண்டும்.

சாட்சிகள் அவருக்கு எதிராக இருந்தன. ஆறாண்டுகள் தண்டனை பெறுகிறார். ஆனாலும் உள்ளுக்குள் உறுத்துகிறது. தான் ஏன் குற்றப் பின்னணியைச் சுமக்க வேண்டும் எனச் சிந்திக்கிறார். சிறைவாசம் நிறைவுறும் தருவாயில் பிணையில் வெளிவந்து, தன்னை நிரபராதி என நிரூபிக்கப் பல்வேறு பிரயத்தனங்கள் செய்கிறார். சிறைப்பட்ட அப்பாவிகளுக்கு உதவிடும் சட்ட ஆலோசனை முகமை ஒன்று அவருக்கும் உதவி செய்கிறது. விடுதலையாகிறார்.

பிரபல அமெரிக்கக் கால்பந்தாட்ட வீரர் பிரையன் பேங்க்ஸ் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களைக் காட்சிப் படுத்திய ஆங்கிலத் படத்தின் கதையம்சம் இதுதான். படத்தைப் பார்த்த உடனே எனது பார்வை நம் மாநிலத்தை நோக்கித் திரும்பியது.

சட்டம் ஒரு இருட்டறை:

தமிழகத்திலும்கூட இவ்வாறாகத் தவறு தலாகக் குற்றம்சாட்டப்பட்ட, சிறைப்பட்ட, பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்படும் இளைஞர்களுக்கு நாமும் இது போலச் சட்டப் பாதுகாப்பு வழங்கலாமே என நண்பரைக் கேட்டேன். அவசியம் செய்ய வேண்டிய விஷயம் என ஆமோதித்தார். சட்ட நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் அப்போதுதான் முந்தைய மாநில அரசு தன் மீது போட்டிருந்த குண்டாஸ் வழக்கில் இருந்து விடுதலையாகி இருந்தார்.

அந்தச் சூழ்நிலையில் நானோ அவரோ எதிர்பார்க்கவே இல்லை, அத்தகைய வழிமுறைகளில் தற்போதைய மாநில அரசால் அவர் மீண்டும் சிறையில் சிக்க வைக்கப் படுவார் என்பதை. ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. மேலும் மோசமானது. கல்யாணராமன் மீண்டும் ஒரு முறை குண்டர் சட்டம் பாய்ந்தது.

விமர்சனங்களை வெறுக்கும் விடியல்:

இத்தனை காலம் இல்லாத அளவு தமிழகம் தற்போது அசாதாரணமான சூழ்நிலையைச் சந்தித்து வருகிறது. நெருக்கடி நிலையை அறிவித்த இந்திராகூட இன்று இருந்திருந்தால் இப்படி நடந்து கொள்வாரா என்பது சந்தேகமே. ஏழு மாதங்களுக்கு முன் ஆட்சிக்கு வந்தவர்கள் ஏழரையைக் கூட்டி வந்திருக்கிறார்கள். விமர்சனங்களை வெறுக்கும் பாசிச மனோபாவம் மேலோங்கி நிற்கிறது.

அரசியல் எதிரிகளைப் பழிவாங்கத் துடிக்கும் கழகக் கண்மணிகள், சமூக வலைத்தளங்களில் கூடத் தங்கள் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளப் பயப்படுகிறார்கள். பைப் வெடிகுண்டு வைத்த தேசவிரோதக் குற்றவாளிகள்கூட வெளியே திரியும் தமிழகத்தில் தேசியக் கருத்துக்களைப் பரப்பும் யூடியூபர்கள் ஆளுங்கட்சியினரால் மிரட்டப் படுகிறார்கள். காவல்துறை அதற்கேற்ப கனகச்சிதமாகச் செயல்படுகிறது.

தக்க ஆதாரங்களோடுத் தம்மை விமர்சிப்பவர்களைக் கண்டு அஞ்சுகிறது திமுக அரசு. தீவிர திமுக எதிர்ப்பாளர்களாக அறியப்பட்ட கல்யாணராமன், கிஷோர் சாமி, மாரிதாஸ், ஷிபின் ஆகியோர் உப்புசப்பில்லாத காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர். காரணமின்றிச் சிலர் மீது தேசவிரோத வழக்குகளும் பதியப்படுகின்றன. தேசியத்திற்கு ஆதரவானக் குரல்கள் தமிழகத்தில் மேலோங்கக் கூடாது என்பதற்காகத் திமுக கூடுதலாக மெனக்கெடுகிறது.

குண்டாஸ் துஷ்பிரயோகம்:

அரசியல் காரணங்களுக்காகப் பலர் மீதும் குண்டர் சட்டம் ஏவப்படுவது சமீப நாட்களில் அதிகரித்து வருகிறது. அதிசயமாக ஷிபினை போல் ஒன்றிரண்டு பேர் முதல் சுற்றிலேயே நீதியை நிலைநாட்டி வெளியே வருகிறார்கள். மாரிதாஸை போல் மூன்றாவது சுற்றில் வென்றவர்களும் உண்டு. ஆனாலும் கல்யாணராமனைப் போல கடைசி வரை மாட்டிக்கொண்டு முழிப்பவர்களே அதிகம்.

ஒருவரது தண்டனை காலம் முடிந்த பின் விடுதலை செய்யப்படுவது இயல்பு, அதுவே சிறைத்துறையின் மரபு. ஆனால் கைது செய்யப்பட்டு கடுங்காவல் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டு, அவரைப் பழிவாங்கியது போதும் என மாநில அரசு நினைக்கும் போது அவர் மீது போடப்பட்ட வழக்கு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தமிழகத்தில் அப்படித் தீர்ப்பெழுத “ஆறு மாத அவகாசம்” தேவைப்படுகிறது.

அப்படிப் பொய்க் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறை வைக்கப் பட்ட அந்த நபர் ஆறு மாத காலத்தில் அனுபவிக்கும் வேதனைக்கு, துன்பத்திற்கு, இன்னல்களுக்கு இடர்பாடுகளுக்கு, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு யார் பொறுப்பாவார்கள்? அவருக்கான இழப்பீடுதான் என்ன?

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என வசனம் பேசும் நீதித் துறை பல நிரபராதிகளைத் தண்டிக்கத் துடிக்கும் ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே துணை போகிறது.

அவர்கள் விஷயங்களில் ஆட்சியாளர்கள் “ஆம்” என்று சொல்லும்வரை நீதித்துறை மௌனம் காக்கிறது. உள்ளே சிக்கியவர்கள் குறைந்தபட்சம் ஆறு மாத காலத்திற்கு அந்த இம்சையை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இந்த தமிழகத்தில் மட்டுமே இன்னமும் நீடிக்கிறது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என இங்கிருந்து குரல் கொடுக்கும் போராளிகள், தமிழகத்தில் இப்படியொருச் சட்டம் துஷ்பிரயோகம் ஆவதைக் கண்டுகொள்வதே இல்லை. காரணம், தற்சமயம் அது அநேகமாகத் தேசியவாதிகளுக்கு எதிராக மட்டுமே பாய்வதால்.

தீமையிலும் நன்மை:

இதுவரையில் அநீதிகளைக் கண்டும் காணாமல் இருந்த நடுநிலையாளர்கள்கூட கட்சி சார்பற்ற மாரிதாஸ் போன்றவர்கள், தற்சமயம் கழக ஆட்சியில் கைது செய்யப் படுவதைக் கண்டு மனம் நொந்து போகிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பக்கமும் இருக்க வேண்டாம் என ஓரமாக ஒதுங்கியே இருந்த மாரிதாஸ் உட்பட பலருக்கும் எந்தப் பக்கம், யாருடன் நிற்க வேண்டும் என்றத் தெளிவு இந்த ஆட்சியாளர்களால் தான் கிடைத்திருக்கிறது.

அவர்களது சோதனையான காலகட்டத்தில் ஆரம்பம் முதல் அவர்கள் விடுதலையாகி வெளிவரும் வரை, வந்த பின்னும் இன்னும் துணை நிற்பது யார் என்பதை அவர்கள் அறிவார்கள். தமிழகத்தில் அதிகரிக்கும் விழிப்புணர்வுக்கு இதுவே வித்தாக அமையும்.

தேவை – சட்ட ஆலோசனை முகமை:

குண்டர் சட்டம் துஷ்ரயோகம் செய்யப்படுவதைத் தவிர்க்க இயலாதா? தவறாக அல்லது உள்நோக்கத்துடன் தண்டிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க ஏதேனும் சட்ட பூர்வ வழிமுறைகள் உண்டா எனச் சில சட்ட நிபுணர்களிடம் கருத்துக் கேட்டு, அவர்களது பதில்களுக்காகக் காத்திருக்கிறோம்.

அதற்கு முன்பாகக் கடந்த மாதம் கடலூர் சென்று வந்தேன். கல்யாணராமனிடம் நான் பேசிய நோக்கமும் அதற்கானக் காரணங்களும் இன்னமும் அப்படியே இருக்கின்றன. இன்றைய உடனடி தேவை ஒருங்கிணைந்த சட்ட ஆலோசனை முகமை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

– கரிகாலன்