‘தேசியக் கல்விக் கொள்கை 2020ல் இடம் பெற்றுள்ள பல்வேறு பரிந்துரைகள் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து 2020 செப்டம்பரில்‘ஆசிரியர்கள் திருவிழா‘நடத்தப்பட்டது. இந்த ஆண்டும், இதேபோல ‘ஆசிரியர்கள் திருவிழா’ இணைய வழியில் நடத்தப்பட்டது. கொள்கை வகுப்போர், நிர்வாகிகள், கல்வியாளர்கள், நிபுணர்கள், பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் இதில் பங்கேற்று தங்களது அனுபவங்கள், கற்றல் முறைகளை பகிர்ந்து கொண்டதுடன், தேசியக் கல்விக் கொள்கை 2020ல் உள்ள அம்சங்களை செயல்படுத்துவதற்கான வழிகளை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் விவாதித்தனர். இது தவிர தொடக்கப் பள்ளி அளவில் கற்றல் திறனை மேம்படுத்த தேசிய இயக்கம் ஒன்றும், ‘நிஷ்டா’ எனப்படும் ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சித் திட்டம் ஒன்றும் தொடங்கப்பட்டு உள்ளது. தேசியக் கல்விக் கொள்கை 2020’ஐ செயல்படுத்த ஆசிரியர்களிடமிருந்து இணையதளம் வாயிலாக கருத்துக்கள் பெறப்பட்டன. சுமார் 15 லட்சம் பரிந்துரைகள் பெறப்பட்டு, என்.சி.இ.ஆர்.டி, சி.பி.எஸ்.இ மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என மத்திய கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி தெரிவித்துள்ளார்.