ஸ்டிக்கர் மட்டும் எங்களுடையது

நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு எனும் பழமொழிக்கு ஏற்ப தமிழகத்தை ஆளத் தெரியாமல் ஆண்டுகொண்டிருக்கிறது தி.மு.க தலைமையிலான தமிழக அரசு. இதற்கு பல சம்பவங்களை உதாரணம் சொல்லலாம். அவ்வகையில், தமிழக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சமீபத்தில் விடுத்துள்ள கோரிக்கையும் மக்களை மலைக்க வைத்துள்ளது.

தமிழக அரசு 650 சமூக உணவகங்களை அம்மா உணவகம் என்ற பெயரில் நடத்தி வருகிறது.. இதேபோல, கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் ‘கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளன என கூறிய அமைச்சர், ‘இத்திட்டத்தை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தவும், விரிவுபடுத்தவும் மத்திய அரசு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 100 சதவீத நிதியுதவி வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது பணம் மத்திய அரசினுடையது பெயர் மட்டும் எங்களுடையது என்பதுதான் டீலிங்க். மொத்த பணத்தையும் மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்றால் அதனை ஏன் ‘கலைஞர் உணவகம்’ என பெயர் வைக்க வேண்டும்? பேசாமல் தீன்தயாள் உபாத்யாய, சியாமா பிரசாத் முகர்ஜி, வாஜ்பாய், ஜனா கிருஷ்ணமூர்த்தி போன்ற தலைவர்களின் பெயரில் துவக்கலாமே?

மழை வெள்ள நிவாரணமாக ரூ. 5,000 மக்களுக்கு கொடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க கோரிக்கை வைத்தால், உடனே மத்திய அரசிடம் இருந்து வாங்கிக் கொடுத்தால் நாங்கள் கொடுத்து விடுகிறோம் என கூறுகிறார் தி.மு.க சுகாதாரத்துறை அமைச்சர். மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்த பிறகு, தமிழக அரசும் பெட்ரோல் டீசல் வரிகளை குறைக்க வேண்டும் என கூறினால், அதுமுடியவே முடியாது; மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் என்கிறார் தி.மு.க நிதியமைச்சர்.

இதேபோல, நீட் தேர்வு ரத்து செய்ய தமிழக பா.ஜ.க உதவ வேண்டும், கொரோனா தடுப்பூசியை தமிழகத்திற்கு அதிகம் பெற்றுத்தர தமிழக பா.ஜ,க உதவ வேண்டும், காவிரி நீரை பெற்றுத்தர தமிழக பா.ஜ.க உதவ வேண்டும் என தங்களின் திட்டங்கள், தமிழகத்தின் அடிப்படை தேவைகள் அனைத்திற்கும் மத்திய அரசின் நிதியையும், தமிழக பா.ஜ.கவின் உதவியையும் வாங்கிக்கொண்டு, ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்கின்றனர் தி.மு.கவினர். சமீபத்தில் இருளர், குறவர் உள்ளிட்ட பழங்குடியினருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய கடன் திட்டங்கள்கூட தமிழக அரசின் திட்டங்கள் இல்லை, மத்திய அரசின் முத்ரா கடன் திட்டங்கள்தான்.

இப்படி மாநிலத்தை சுயமாக நடத்த முடியாமல் அனைத்தையுமே மத்திய அரசும், தமிழக பா.ஜகவும்தான் செய்ய வேண்டும்,  ஒவ்வொரு முறையும் தி.மு.க கையேந்துவதற்கு பதிலாக, பேசாமல் மத்திய அரசுடன் இணக்கமாக சென்றுவிடலாமே?

மதிமுகன்