வ.உ.சிதம்பரம் பிள்ளை

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, ஓட்டப்பிடாரத்தில் 1872 செப்டம்பர் 5ம் தேதி பிறந்தார். வ.உ.சியின்  தந்தை அப்போதே பாரதத்தில்  பிரபலமான வழக்கறிஞர். வ.உ.சியும் தனது கல்வி முடிந்து, தந்தையின் வழியில் வழக்கறிஞரானார். வ.உ.சி, ஏழை மக்களின் மீது கொண்ட அனுதாபத்தால் இலவசமாக வாதாடினார். தனது சிறப்பான வாத திறமையினால் பல வழக்குகளில் வெற்றி கண்டார். சிறந்த வழக்கறிஞர் என்ற பெயர் பெற்றார்.

நாட்டின் அடிமைத்தனத்தை நீக்க பாலகங்கதர திலகரின் வழியில் 1905ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாரதத்தில் சுதேசி இயக்கம் தலைதூக்கிய அந்நேரத்தில், லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக வற்புறுத்தலுக்கு முற்று புள்ளி வைக்க முயற்சித்தனர். ஆங்கிலேயர்களின் தமிழகம் இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்தில் கட்டண கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார் வ.உ.சி. ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பல் விடுவதை வணிகமாக மட்டும் அவர் பார்க்கவில்லை. அதனைக்கொண்டு சுதந்திர உணர்வை ஏற்படுத்தினார். நண்பர்கள் உதவியுடன் இரண்டு கப்பல்கள் வாங்கி கப்பல் போக்குவரத்தை தொடங்கினார். ஆங்கிலேயர்களுக்கு இதனால் வருமான இழப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி கோரல் மில்ஸ் தொழிலார்களுக்காக போராட்டம் நடத்தினார். இதனால், அரசுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டி, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரட்டை ஆயுள் தண்டனை வழங்கினர். வழக்கறிஞர் உரிமம் பறிக்கப்பட்டது. சிறைச்சாலையில் செக்கு இழுக்க வைத்து சித்தரவை செய்தனர். அதனால் அவருக்கு ‘செக்கிழுத்த செம்மல்’ என்ற பெயரும் உண்டு. எனினும் சிறையில் இருந்தே தனது சட்ட மனுக்கள் மூலம் சுதேசி நடவடிக்கைகளை தொடர்ந்தார். சுயசரிதையை எழுதினார். ஜேம்ஸ் ஆலன் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்தார். திருக்குறள், தொல்காப்பியத்திற்கு உரை எழுதினார்.

கடின உழைப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் வ.உ.சியை விடுதலை செய்தனர். ஏழ்மை நிலையால், மனைவி மக்களுடன் சென்னையில் குடியேறினார். மண்ணெண்ணெய் வியாபாரத்தை தொடங்கினார். இரக்க குணத்தால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தும் வசதியாக வாழாமல், சிறை, போராட்டம் என தன் வாழ்நாள் முழுவதும் தேச விடுதலைக்காகவே உழைத்த வ.உ.சி, 1936, நவம்பர் 18ல் தூத்துகுடியில் காலமானார்.