திருமருகல் என்ற ஊரில் பிறந்து திருவாவடுதுறைக்கு இடம்பெயர்ந்து வளர்ந்தவர் டி.என் ராஜரத்தினம் பிள்ளை. சின்னப் பையனாக இருந்தபோதே, கச்சேரிகளில் வாய்ப்பாட்டு பாட வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் திருவாவடுதுறை மடத்தின் ஆஸ்தான நாகஸ்வர வித்வான் நடேசப் பிள்ளையின் தொடர்பு கிடைத்தவுடன் தனது ஜீவன் நாதஸ்வரத்தில்தான் இருக்கிறது என்று கண்டுகொண்டார்.
ஒரு கச்சேரிக்கு, தான் வரும்போது எழுந்து நிற்காத ஜில்லா கலெக்டரிடம் ராஜரத்தினம் சொன்னாராம். ”ஏம்ப்பா… நான் இந்தக் கச்சேரிக்கு மட்டும் மூவாயிரம் ரூபாய் வாங்கியிருக்கேன். உன் மாசச் சம்பளமே ஆயிரத்தைத் தாண்டாது. நீ பெரியவனா, நான் பெரியவனா?” என கேட்டவர் அவர்.
ஒரு சமயம், மைசூர் மகாராஜாவையே ஒரு பிடி பிடித்துவிட்டார். கச்சேரி முடிந்ததும் கைதட்டிப் பாராட்டிய மகாராஜா, ”கணக்குப்பிள்ளை, பணத்தை எடுத்துவந்து பிள்ளைக்குக் கொடு” என்றாராம். உடனே பிள்ளை, பக்கவாத்தியம் வாசித்தவரைக் கூப்பிட்டு, ”மேளக்காரரே… பணத்தை வாங்கும்” என்று சொல்லிவிட்டு, மகாராஜாவிடம், ”நீங்கள் மாநிலத்துக்கு ராஜா என்றால் நான் இசைக்குச் சக்கரவர்த்தி” என்று சொல்லியிருக்கிறார். அப்புறமென்ன மகாராஜா தன் கையாலேயே பிள்ளைக்குச் சன்மானம் செய்தார்.
அக்காலத்தில் ‘திமிரி’ எனும் அளவில் சிறிய நாதஸ்வரம் புழக்கத்தில் இருந்தது. வாசித்தால் ஆறு மைல் தூரத்துக்கு அப்பாலும் கேட்கும். அதில் நளினம் சேர்த்து அதை ராஜ வாத்தியமாக்க விரும்பினார் ராஜரத்தினம் பிள்ளை. ரங்கநாத ஆச்சாரியுடன் சேர்ந்து விதவிதமான சோதனைகள் செய்து அதனை ‘பாரி’ என்கிற அளவில் பெரிய இனிய சத்தம் எழுப்பும் நாதஸ்வரத்தை வடிவமைத்தார்.
‘பண்டார சந்நிதி (மடத்துத் தலைவர்) வீதி உலா வரும்போது அதைத் தடுக்க வேண்டும்’ என்று தி.கவினர் திட்டம் போட்டார்கள். ”நீங்க வீதி உலா போங்க… நான் பாத்துக்கிறேன்” என்றார் பிள்ளை. தி.கவினர் நின்றிருந்த இடத்தை ஊர்வலம் நெருங்கும்போது, எங்கிருந்தோ வந்த ராஜரத்தினம் பிள்ளை தடாலென பண்டார சந்நிதி பல்லக்கின் முன்பு விழுந்து கும்பிட்டார். ”ராஜரத்தினம் பிள்ளையே வந்து கால்ல விழறாரு. இந்தப் பண்டார சந்நிதி உண்மையிலேயே மகான்தான் போலிருக்குது” என்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுவிட்டனர்.