குருவும் கஞ்சனும்

ஒரு ஊரில் ஒரு பரம கஞ்சன் இருந்தான். எச்சில் கையால் காகத்தை விரட்ட மாட்டான். ஆனால் நல்ல பணக்காரன். அப்பேற்பட்ட கஞ்சன் குருவிடம் வந்தான். இவனுக்கு ‘பசுமரத்தில் ஆணி பதிவது போல’ புத்தி புகட்ட வேண்டும் என்று அவர் நினைத்தார். இருந்த போதிலும் நேரடியாகச் சொல்லாமல் ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ கற்பிக்க எண்ணினார்.

அன்பரே! இங்கே வாருங்கள் என்று ஒரு ஜன்னலுக்கு அருகில் அழைத்துச் சென்றார். என்ன தெரிகிறது? என்று கேட்டார்.

கஞ்சன் சொன்னான்: ஜன்னல் கண்ணாடி.

குரு: அது சரி. அது வழியாக என்ன தெரிகிறது.

கஞ்சன்: மக்கள்; தெருவில் நடமாடும் மக்கள்.

பின்னர், அந்தக் கஞ்சனை குரு, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி அருகே அழைத்துச் சென்றார்.

இது என்ன?

கஞ்சன்:–முகம் பார்க்கும் கண்ணாடி.

இதில் என்ன தெரிகிறது?

கஞ்சன்:–நான் என்னைப் பார்க்கிறேன்.

ஜன்னலிலும் கண்ணாடிதான் இருந்தது. இங்கும் கண்ணாடிதான் இருக்கிறது. ஏன் இங்கே உங்கள் முகம் தெரிகிறது; அங்கே மக்கள் தெரிந்தது?

கஞ்சன்:– முகம் பார்க்கும் கண்ணாடியில் வெள்ளி (ரசம்) பூசியதால் என் முகம் தெரிந்தது. ஜன்னல் கண்ணாடி தூய பளிங்கு போன்றது.ஆகையால் மக்கள் தெரிந்தனர்.

உடனே குரு சொன்னார்: பார்த்தீர்களா. தூய கண்ணாடி இருந்தால் மக்கள் தெரிகின்றனர் (பொது நலம்). வெள்ளி இருந்தால் உங்களைத்தான் பார்க்க முடிந்தது (சுயநலம்). உங்களிடம் கொஞ்சம் வெள்ளி (பணம்) சேர்ந்துவிட்டால் மக்கள் மறைந்து உங்களை மட்டுமே பார்க்கிறீர்கள் என்றார்.

கஞ்சனுக்கு நீதி புரிந்தது!