இலங்கை, மியான்மர், நேபாளம், மாலத்தீவு, வங்கதேசம் ஆகிய நமது அண்டை நாடுகளை தன்னுடைய கைப்பாவையாக மாற்ற சீனா முயற்சி செய்வது தான் இன்று பிரச்சினை.
இலங்கை
சில வருடங்களுக்கு முன் இலங்கை வெளியுறவு அமைச்சர் சீனாவிற்கு விஜயம் செய்தபோது, சீனா நட்பு நாடு, இந்தியா எங்களின் உறவு நாடு என கூறியது பலருக்கு வியப்பை அளித்தது. ஆனால், ஆண்டுகள் மாறியதும், இலங்கையின் சீன பாசமும் மாறிவிட்டது. பாரதத்தின் குமரிமுனையிலிருந்து கொழும்பு பக்கம் கிட்டத்தட்ட 290 கி.மீ. அளவுக்கு சீனா நெருங்கி விட்டது. இதுவரை வடகிழக்கிலும், வடமேற்கிலும் சீனா, பாகிஸ்தான் மூலம் போர்களை சந்தித்த பாரதம், இனிமேல் தெற்கே சீனாவின் ஆதிக்கத்தால் கடல்வழியாக பிரச்சினை களை சந்திக்க வேண்டிய சூழல். கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் என்ற பெயரில் உள்ளே நுழைந்த சீனா, ஹம்பந்தோட்டா மட்டுமல்லாமல், இலங்கையைச் சுற்றி கிழக்கே திரிகோணமலை உட்பட தன் ஆதிக்கத்தை வளர்த்து வருகிறது. அதாவது ஹம்பந்தோட்டா துறைமுகத்தை ஒட்டி 15,000 ஏக்கர் நிலங்களை சீனாவிற்கு இலங்கை அரசாங்கம் தாரை வார்த்து, சீன இறையாண்மை கொண்ட பகுதியாக அறிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகருக்கான சட்ட மூலத்தில் குடி வரவு – குடி உரிமை சம்பந்தமான விஷயங்களை சீனா வசமுள்ள துறைமுகமே கவனிக்கும். இதன் மூலம் இலங்கை அரசுக்கும் துறைமுக நகருக்கு வந்து செல்லும் வெளிநாட்டு குடிமக்களுக்கும் சம்பந்தமில்லை என்று அந்தத் துறைமுகப் பகுதியை தனிநாடாக சீனா அறிவிக்கும் ஆபத்தும் உள்ளது. மத்திய கிழக்கை ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்கும் சீனாவின் பெருங்கனவான பட்டுப்பாதை திட்டத்தின் ஓர் அங்கமே கொழும்பு துறைமுக நகர திட்டம்.
இலங்கையில் சீனா கால் வைத்தவுடன், அங்கு தமிழுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கையையும் பாரதத்தையும் இணைக்கும் பாலமே, ஆன்மிகம். தமிழ் மொழியும் ஹிந்து தர்மமும் ஒன்றோ டொன்று பிணைந்தவை. இதைமுடக்க சீனா சில காய்களை நகர்த்தியுள்ளது. இலங்கை பாரதத்துடன் உற வாடாமல் இருக்க தமிழ் மொழி அழிப்புநடைபெறுகிறது. கொழும்பு துறைமுக நகர் திட்டத்திலுள்ள பெயர் பலகையில் சிங்களம், ஆங்கிலம், சீன மொழிகள் மட்டுமே உள்ளன. குறிப்பாக சென்டரல் பார்க் என கொழும்பு நகரில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் முதலில் சிங்களம், இரண்டாவது ஆங்கிலம், 3வது சீன மொழி இடம்பெற்றுள்ளன. இதை இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மனோ கணேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
வங்கதேசம்
கடந்த 1971லிருந்து தலைவலி கொடுத்து வரும் நாடு வங்கதேசம். ஒரு பக்கம் சட்டவிரோதமாக ஊடுருவும் வங்கதேச முஸ்லிம்களும் மறுபுறம் மியான்மர் நாட்டிலிருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்களும் பாரத நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளனர். பாரதம்-வங்கதேசநாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்பட வில்லை. 4,096 கி.மீ. தொலைவிலான எல்லையில் 162 உறைவிடங்கள் காணப் படுகின்றன.
இதில் 50 உறைவிடங்கள் பாரதத்துக்கும், 111 உறைவிடங்கள் வங்கதேசத்துக்கும் பிரித்துக் கொடுக்கப் பட்டுள்ளன. தேசிய எதிர்ப்பு தளவாடங்கள், ஆள் கடத்தல், கால்நடைகள் கடத்தல், பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு இந்த உறைவிடங்கள்தான் சொர்க்க பூமி. வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களில் பயங்கரவாத, அடிப்படைவாத வேலைகளில் இற்ங்குகிறவர்கள் பெரும்பாலும் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள். வங்கதேசத்தில் தடை செய்யப்பட்ட ஜமாத் ஹிஸ்புல் முஜாஹிதீன் பங்களாதேஷ் அமைப்புக்கு மேற்கு வங்க மாநிலம் பாதுகாப்பிடமாக மாறியுள்ளது. ஆட்சிகள் மாறினாலும், வங்கதேசத்துடன் தீர்வு காண வேண்டிய பிரச்சனைகளான பராக்கா தடுப்பணைகள், டீஸ்டா நதிநீர் பங்கீடு, எல்லைக்கோடு பிரச்சினை, நியூ மூர் தீவு, சக்மா அகதிகள் பிரச்சினை ஆகியவை அவ்வப்போது தலைதூஊக்குகின்றன.
மியான்மர்
மியான்மரில் ராணுவ ஆட்சி உருவாவதற்கு சீனாவும் ஒரு காரணம். தெற்காசியாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையிலான ஒரு பாலமாக மியான்மர் நாடு அமைந்துள்ளது. ராஜதந்திர நடவடிக்கையாக மியான்மர் அரசுடன் நல்லதொரு உறவை பாரத அரசு முன்னெடுத்தது. ஆனால், பாரதத்துக்கு எதிரான புவிசார் அரசியல் தளமாக மியான்மரை உருவாக்க சீனா விரும்புகிறது. பாரதத்தின் அண்டை நாடுகளில் ராணுவ தளங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியாவை சுற்றி வளைக்க சீனா விரும்புகிறது. பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின் (பிஆர்ஐ) ஒரு பகுதியாக சீனா-மியான்மர் பொருளாதார தாழ்வாரத்தின் (சிஎம்இசி) கீழ், மியான்மரில் பல பெரிய திட்டங்களுக்கு நிதியளித்து அபிவிருத்தி செய்து எதிர்காலத்தில் ராணுவ தளங்களாக பயன்படுத்தப்படலாம்.
அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம் ஆகிய பாரதத்தின் வடகிழக்கு மாநிலங்கள் மியான்மரின் எல்லை நெடுக அமைந்துள்ளன. இந்த மாநிலங்களில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு மியான்மர் அரசு மிகப்பெரிய உதவியும் புரிந்தது. ஆனால், சீனாவின் துணையுடன் ஆட்சி கவிழ்ப்பு நடந்த பின்னர், மீண்டும் கிளர்ச்சியாளர்கள் ஊடுருவுவார்கள் என்ற கவலையும் உள்ளது. ஏற்கனவே வடகிழக்கு பிரிவினைவாதிகளுக்கு ஆயுத உதவி, நிதியுதவி, ஆயுதப் பயிற்சி அளித்த நாடு சீனா. தற்போது மியான்மரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அங்கெல்லாம் பயங்கரவாதிகளின் கை மீண்டும் ஓங்கலாம்.
ஏற்கனவே இந்தியா- – மியான்மர்- – தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை, காலதான் மல்டி-மோடல் டிரான்ஸிட் டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க், ஆழமான நீரில் திட்டமிட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கப்படுமா என்ற கேள்வியெழுகிறது. முத்தரப்பு நெடுஞ்சாலை திட்டம் முடிவ டைந்தாலும், பயன்பாட்டிற்கு கொண்டு வர சீனா முட்டுக்கட்டை போடும். மியான்மரின் சிட்வி துறைமுகத்திலிருந்து லேஸ்யோகவிற்கு ஆறு வழியாகவும் பின் லேஸ்யோவிலிருந்து மிஸோரம் மாநிலத்துக்கு தரை வழி போக்குவரத்து திட்டமும் தடைபடுகிறது. மியான்மரில் உள்ள தடைசெய்யப்பட்ட தாங் தேசிய விடுதலை ராணுவத்தின் கை ஓங்கும். இது இந்தியாவில் வடகிழக்கு எல்லையில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு கொண்டாட்டமாகிவிடும்.
நேபாளம்
நேபாளத்தில் நிச்சயமற்ற ஆட்சி இருப்பதால், சீனாவின் குள்ளநரித்தனத்தால் இந்தியாவிற்கு ஆபத்தான நாடாகலாம். நிலம் சூழ்ந்த நாடாக நேபாளம் அமைந்திருப்பதால் வெளிநாடுகளுடன் இணைய பாரதத்தைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், சீனத் தரப்பில் திபெத்திலிருந்து நேபாளத்திற்கு கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இது பாரதத்தின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும். சீனாவின் தூண்டுதல் காரணமாக பாரதத்துக்கு உட்பட்ட சுஸ்தா, காலாபானி பகுதிகளை தனது பகுதிகளாகச் சித்தரித்து வரைபடம் ஒன்றை நேபாள அரசு வெளியிட்டது.
மாலத்தீவு 1968ல் மாலத்தீவு விடுதலை பெற்றதிலிருந்து பாரதத்துடனான அதன் உறவு தொடங்கியது. மாலத்தீவை அங்கீகரித்த முதல் நாடு பாரதம் தான். சார்க் அமைப்பில் மாலத்தீவும் ஓர் உறுப்பினர். ஆனால், உரி தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் நடக்கும் சார்க் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பாரத அரசின் அழைப்பை நிராகரித்துவரும் ஒரே சார்க் நாடு மாலத்தீவு தான். யாமின் ஆட்சியின் கீழ், பயங்கரவாதப் போக்கு மிகவேகமாக அதிகரித்தது. சிரியாவில் வெளிநாட்டு படையினரில் பெரும் பகுதியினர் மாலத்தீவைச் சேர்ந்தவர்கள். பாரதத்துக்கு கேடு விளைவிக்கும், இன்று இஸ்லாமிய பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்தத் தவறிய அண்டை நாடு மாலத்தீவு.
பாரதத்துடனான ஜி.எம்.ஆர். திட்டத்தை மாலத்தீவு ரத்து செய்துவிட்டு, தற்போது சீனாவிடம் அதை தந்துள்ளது. பாகிஸ்தானுக்கு அடுத்ததாக சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட்ட நாடு மாலத்தீவு. இதுபோன்ற ஒப்பந்தத்தை பாரதத்துடன் மாலத்தீவு கையெழுத்திடவில்லை. மாலத் தீவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நடவடிக்கை 2018ல் கையெழுத்திடப் பட்டது. பாரதத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே இது கருதப்படுகிறது.