சீனத்தொற்றால் உலக பொருளாதாரம் சீரழிந்து, அதனால் நாடுகள் அலைக்கழிக்கப்படுகின்றன. மூன்றாவது அலையில் மூழ்கிக் கொண்டிருக்கும் நாடுகளும் உண்டு. நம்பிக்கைத் தரும் விதமாகச் சில நாடுகள் மூன்றாவது அலையில் இருந்து மீண்டு வரத்தொடங்கி இருக்கின்றன.செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நம் நாட்டையும் மூன்றாவது அலை தாக்கக்கூடும் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. அலை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியப் போக்கும், அலை வருவதற்குள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற அவசரமும் சிலரிடம் காணப்படுகின்றன. இரண்டுமே தவறு.
“மூன்றாவது அலை வராமல் தடுப்பது தான் அரசின் பிரதான குறிக்கோள்” என்கிறார் பாரதப் பிரதமர் மோடி.அரசு நோய்க்கு மருத்துவத்தை மட்டுமே தரும். எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு ஆளாகாமல் மக்கள்தான் பொது அறிவுடன் நடக்கவேண்டும்.
இப்போதைய நிலை என்ன? ஆக்சிஜன் பற்றாக்குறை அறவே இல்லை. மத்திய அரசு மட்டுமல்ல, அந்தந்த மாநில அரசுகளும் அதை உறுதிப்படுத்தி விட்டன. அதற்கான மருந்து, தடுப்பூசித் தட்டுப்பாடும் இப்போது இல்லை. அனைத்துக்கும் காரணம் மத்திய அரசு. அது புரிந்ததால்தான் கூடுதல் ஒதுக்கீடு கேட்டுப் பல மாநில அரசுகள் ஓலை மட்டுமே வரைகிறார்கள்.
சரி, இத்தனை நாள் பிரச்சினைப் பெரிதாக இருந்ததா? ஆம், ஆனாலும் அரசின் கட்டுக்குள் தான் இருந்தது. பிறகு ஏன் அரசின் மீது அவநம்பிக்கை? அனைத்துக்கும் ஊடகங்களே காரணம்.தேசிய அளவில் ஊடகங்களுக்குத் தூண்டில் போடப்பட்டது. திட்டமிட்டு அவதூறு பரப்ப ஒவ்வொரு தூண்டிலிலும் வெவ்வேறு விதமான புழுக்கள். அவை பல்கிப் பெருகி இப்பொழுது எல்லார் சாயமும் வெளித்துக்
கொண்டிருக்கின்றன. நாடு முழுவதுமான ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் தடுப்பூசி செலுத்தும் டிசம்பர் மாத இலக்கை நாம் குறித்த காலத்தில் எட்ட முடியாது என இகழ்ந்தது ‘தி இந்து’ பத்திரிகை. ஆனாலும் இதுவரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே இலக்கைக் கடந்து வருகிறோம்.
நம் சொந்தக் கண்டுபிடிப்பான கோவாக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது. ரஷ்யக் கண்டுபிடிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசியை இப்போது நாம் உள்நாட்டிலேயேத் தயாரிக்கிறோம். இவை நாடெங்கும் பரவலாகக் கிடைக்கிறது. அமெரிக்கத் தயாரிப்பான மொடெர்னா தடுப்பூசி இறக்கு மதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இரு தடுப்பூசிகள் தயாரிப்பில் உள்ளன.இன்றளவில் நம் நாட்டில் கால்வாசிப் பேர் ஒரு தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டுள்ளார்கள். செலுத்தப்பட்ட மொத்தத் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 40 கோடியைத் தாண்டி விட்டது. நினைவில் கொள்ளுங்கள்.
தடுப்பூசி குறித்தத் தவறான தகவல்களைப் பரப்பியவர் தான் இன்றைக்குத் தமிழக முதல்வர். அவர்களின் கூட்டம் அன்று பரப்பிய பொய் இன்றளவும் சரிசெய்ய முடியாத அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தமிழர்களின் வாழ்வு சூறையாடப்படுவதாக தம்பட்டம் அடித்த தமிழக ஊடகங்கள், தேர்தலுக்குப் பின் இப்போது என்னமோ தமிழகமே தலைகீழாக மாறிவிட்டது போல மௌனம் சாதிக்கின்றன. இத்தனைக் களேபரங்களில் கனடாவையும் கியூபாவையும் காணவில்லை; ஆரம்ப நாட்களில் கேரளா ‘முன்மாதிரி’ இப்பொழுது கேரளா என்றாலே ‘வேறு மாதிரி’. கம்யூனிஸ்ட் அரசின் அலட்சியத்தால் பாரதத்தின் கொரோனா நுழை வாயிலாகி விட்டது கேரளம். அதற்கு அடுத்த இடத்தில் மகாராஷ்ட்ரம்.
கொரோனா தொற்று எந்த ஒரு மாநிலத்திலும் ஆட்சியாளர்களைப் பார்த்து உள் நுழைவதில்லை. ஆனால் ஆட்சியாளர்களைப் பொருத்தே அது அதிகம் பரவுகிறது. அப்படித்தான் சீன வைரஸுக்குக் கேரளமும் மகாராஷ்ட்ரமும் மாமியார் வீடாக மாறிவிட்டன. ஆனால் பல ஊடகங்கள் இந்த உண்மைகளை கவனமாகத் தவிர்த்து விடுகின்றன.அவர்களோடு ஒப்பிட்டு, தமிழகம் தப்பித்தது என்று இப்போதைக்கு நாம் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். ‘புது மாப்பிள்ளை’ திமுக அரசு இன்றைய தினத்தில் எந்தப் பொய்யை வேண்டுமானாலும் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம்.
ஆனால் வரவிருக்கும் மாதங்களில் ஆபத்து மிகப்பெரிதாக வெடிக்கக் கூடும். எப்படி? முதல் ஒதுக்கீட்டில் வீணாகாமல் பயன்படுத்தப்படும் அளவைப் பொறுத்துதான் அடுத்தக்கட்ட ஒதுக்கீடுகள் நடக்கின்றன. ஆரம்பத்தில் அசட்டையாக இருந்துவிட்டு, கிடைத்ததில் கொஞ்சத்தையும் வீணடித்து விட்டு ‘எங்கள் 8 கோடி மக்களுக்கு எங்கே ஊசி’, என்று கூப்பாடு போடுவதில் பயனில்லை. மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகள் குறித்த புள்ளிவிவரங்கள் கோவின் இணையதளத்தில் வெளிப்படைத்தன்மையோடு இருக்கின்றன.
ஆனால் மாவட்டங்களுக்கானத் தடுப்பூசி ஒதுக்கீட்டில் மாநிலங்கள் அதேபோன்ற வெளிப்படைத்தன்மை இல்லை.குறிப்பாக தமிழகத்தில் அத்தகைய வெளிப்படைத்தன்மை இல்லாததால்தான் கோவை சட்டமன்றதொகுதி புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.பொது விநியோகத் திட்டத்தால் மத்திய அரசு எப்படி தனது செலவில் உணவு பொருட்களை மாநில அரசுகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கிறதோ, அப்படியே தடுப்பூசிகளையும் தனது செலவிலேயே மாநிலங்கள் வழியாக மக்களுக்கு இலவசமாகவே விநியோகிக்கிறது.
மத்திய தொகுப்பிலிருந்து வரும் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள வேண்டுமானால் மக்கள் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இணையவழி முன்பதிவு செய்ய இயலாதவர்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களில் சுகாதாரத் துறை மூலம் பதிவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தின் பல ஊர்களில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் அவர்கள் பெயர் போட்டு அனுமதிச் சீட்டை விநியோகிக்கிறார்கள்.
பாரதப் பேரரசைப் பொறுத்தவரையில் அனைவரும் ஓர் நிறை, அனைவரும் ஓர் மக்கள். அதன் அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி தருகிறது. மத்திய அரசு. அதில் பாரபட்சமாகப் பயனாளிகளைத் தேர்வு செய்கிறது திமுக அரசு.
தடுப்பூசியும், தனிமனிதக் கட்டுப்பாடும் மட்டுமே போதாது. பொது அறிவே நமக்கான பாதுகாப்பு. ஆக, நாட்டைப் பொறுத்த வரையில் மூன்றாவது அலையிலிருந்து நாம் தப்பித்து விடுவோம் என்று நம்பிக்கை வலுவாக இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை மூன்றாவது அலை என்றில்லை, இனி எந்தவொரு அலையும் நம்மைத் தாக்காமல் காப்பதற்குத் திராவிட அலை ஓய்ந்தால் மட்டுமே சாத்தியம்.
-கரிகாலன்