தமிழக அரசு கோயில் சொத்தை காக்கிறதா? தாரை வார்க்கிறதா?

சமீபத்தில் தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, வடபழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை முதன்முதலாக மீட்டதாகவும், இது டிரையல் தான்… மெயின் பிச்சர் இனிமேல் தான் எனவும் கட்டமைக்கப்பட்டது.இந்த இடம் 2006ல் அதிமுக பிரமுகர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, சுவர் எழுப்பப்படுவது குறித்து ஹிந்து முன்னணி மாநில பொறுப்பில் இருந்த துரைசங்கருக்கு அப்பகுதி பொறுப்பாளர் மூலம் தகவல் தெரிந்தது. உடனே ஹிந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலனிடம் தகவல் தெரிவித்துவிட்டு, நேரடியாக அந்த இடத்திற்குச் சென்றார். அடுத்த ஒரு மணி நேரத்தில் ராம. கோபாலன் முன் அறிவிப்பும் இன்றி அந்த இடத்தில் வந்து இறங்கினார். உடனே பரபரப்பு தொற்றிக்கொண்டது, அந்த பகுதியை சுற்றியிருந்த ஹிந்து முன்னணி தொண்டர்கள் வரத் துவங்கினர். இதற்கிடையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

உடனே கோட்டையில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு தகவல் காவல்துறையின் மூலம் சென்றவுடன், அவர், ஆக்கிரமித்த அந்த நபரை கைது செய்யவும், புல்டோசர் வைத்து அந்த சுவரை இடித்துத் தள்ளி அப்புறப்படுத்தவும் அவர் உத்தரவிட்டார். இந்த தகவல் ராம. கோபாலன், துரைசங்கர் ஆகியோரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த சுவர் இடித்து அப்புறப்படுத்தும்வரை இருவரும் தொண்டர் களுடன் இருந்து பின்னர் புறப்பட்டனர். ஆக்கிரமித்த அந்த அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார், சிறையிலிருந்து வந்தவுடன் அவர் திமுகவில் சேர்ந்தார் என்பது வேறு விஷயம்.(அடுத்து, மு. கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் 2008ல் சாலிகிராமத்தில் இருக்கும் இடத்தில் பெரும்பகுதியை சமூக நலத்துறைக்கு குத்தகைக்கு கொடுக்க முடிவு எடுத்தது ஹிந்து சமய அறநிலையத்துறை. இதற்காக மாதம் பத்து லட்சம் வாடகையாக வருமானம் வரும் என பத்திரிகையில் கூறினார் அப்போதைய அமைச்சர் பெரியகருப்பன்.

இதனை எதிர்த்து ஹிந்து முன்னணி ராம கோபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. ‘இது கண்துடைப்பு நாடகம், கோவில் இடத்தை அரசு துறைக்கு மடைமாற்றும் பித்தலாட்டம், இதனால் கோவிலுக்கு ஒரு பைசா பலனும் கிடைக்காது’ என கூறினார் அவர்.
இதேபோல், 2008ல் தாரை வார்க்கப்பட்ட அந்த இடத்தில் கட்டடம் கட்டிய தமிழக அரசின் சமூக நலத்துறை இதுவரை வாடகை தரவில்லை. மேலும், அந்த இடத்தை பராமரிக்கவும் இல்லை.)இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தை பாதுகாக்க அறநிலையத்துறை வேலி அமைக்கும் பணி துவங்கியபோது, பொதுமக்கள் உபயோகித்து வந்த நடைபாதைக்கு ஒர் இடம் ஒதுக்கப்பட்டு, மற்ற இடங்களை மறைத்து வேலி போட ஆரம்பித்தனர்.

அப்போது முஸ்லிம்கள், தாங்கள் மசூதிக்குச் செல்ல நடுவில் பாதைக்கு 20 x 80 அடி பாதை வேண்டும் எனக் கேட்டனர். அதற்கு அறநிலையத்துறை அதிகாரி, ‘இது கோயில் சொத்து, இதனை பாதுகாக்கவேண்டிய பொறுப்புதான் எனக்கு இருக்கிறது’ எனக் கூறினார். இதையடுத்து விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர், அமைச்சர் ஆகியோரிடம் பேசி ஒப்புதல் பெற்றதாகச் சொல்லப்பட்டது. பிறகு மசூதிக்கு வழி விடப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஹிந்துக்களின் நூற்றாண்டு கால ஆலயங்கள் இடிக்கப்படுகின்றன. கோயில் சொத்தை கொடுக்க சொல்லி எம்.எல்.ஏ ஹிந்து சமய அதிகாரியை கட்டாயபடுத்துகிறார்.

மசூதி ஒலிபெருக்கியில் முஸ்லிம்களை அழைத்து, கூட்டம் சேர்ந்து முஸ்லிம்கள் அச்சமூட்டி, மிரட்டி அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்திருக்கிறார்கள். ஆனால் வழக்கு இல்லை, கைது நடவடிக்கை இல்லை.கோயில் சொத்தை மசூதிக்கு வழிவிட சொன்ன எம்.எல்.ஏ. அதே மசூதிக்கு சாலையில் நேரடியாக இருக்கும் சாலையை ஹிந்துக் கோவிலுக்கு எடுத்துக்கொள்ளப் பேசுவாரா?
இத்தனை நடந்தபிறகும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இது குறித்து பேசவில்லை. சட்டமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பப்படும் இல்லை என்பதை பார்க்கும்போது, கோயில் சொத்துக்களை தமிழக அரசு மீட்பதாக நடத்தும் நாடகம் வேறு எதற்கோ என்ற சந்தேகம் எழுகிறது. ஹிந்துக்கள் விழிப்புடன் இல்லையென்றால் கோயில் சொத்துக்களை வேற்று மதத்தினருக்கு தாரைவார்க்கவும் தமிழக அரசு தயங்காது என்ற அச்சம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது உண்மை.

கட்டுரையாளர் : ஏ.டி.இளங்கோவன்