விதிமீறல்களை சரிசெய்ய தேவை ஓர் உத்தரவு

இன்றைய நவீன உலகில் உணவகங்களின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், நேரில்சென்று வாங்க நேரமில்லை அல்லது சோம்பேறித்தனம், அதன் காரணமாக ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற உணவு கொண்டு தரும் நிறுவனங்களில் வேலை செய்வோர் பல்கி பெருகிவிட்டனர்.
‘‘உணவை இத்தனை நிமிடங்களில் உங்கள் இடத்துக்கு கொண்டு வந்து சேர்க்கிறோம். இல்லாவிட்டால் பணம் தரவேண்டாம்” என்று இந்த நிறுவனங்கள் சவால் விடுக்கின்றன. சேவையைக் குறித்த நேரத்தில் அளிப்பேன் என்று உத்தரவாதம் அளிப்பதில் தவறில்லை. ஆனால், இதற்காக சாலை விதிகளை மீறும்போது தான் மற்றவர்களுக்குப் பிரச்சினை ஏற்படுகிறது.
இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேகமாகப் பயணிப்பதைப் பார்த்தால் நிச்சயம் பதறுவோம். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை, கோவை போன்ற நகரங்களில் இந்த ஊழியர்கள் ஏற்படுத்தும் இடையூறுகளைச் சொல்லி மாளாது. சாலை விதிகளை மதிக்காமல் எதிர்ப்புறத்தில் இவர்கள் வருவதைப் பார்த்தால், விதிமுறைகளைப் பின்பற்றி வாகனம் ஓட்டுபவர்கள் அச்சத்துடனே பயணிக்க வேண்டியுள்ளது. இவர்கள் யாருடைய வீட்டு சாலையில் செல்கிறார்கள்? அவர்களுக்கென பிரத்யேக பாதை ஏதேனும் உள்ளதா?
சாலையும், பள்ளங்களும், தெரு விளக்குகளும் இருக்கும் நிலையில் இலக்குகளை அடைய உயிரை பணயம் வைத்து எதற்காக இப்படி ஒரு ஓட்டப்பந்தயம்? அந்த உணவு பத்து நிமிடங்கள் கழித்து வந்தால் என்ன ஆகிவிடும்? பொது சாலைகளில் வேகமெடுத்து வழியில் இவர்கள் விபத்து ஏற்படுத்தினால் யார் பொறுப்பு? ஒருவேளை இவர்களுக்கே விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? இவர்கள் செய்வது இந்திய மோட்டார் சட்டப்படியும், போக்குவரத்து விதிகளின்படியும் தண்டனைக்குரிய குற்றம்.
எந்தத் தொழிலை செய்தாலும், நாட்டின் விதிகளுக்கு உட்பட்டு இயங்கியாக வேண்டும். இல்லையென்றால், எவ்வளவு அத்தியாவசியமான தொழிலாக இருந்தாலும், அது சட்டவிரோதமே.எனவே, இத்தனை நேரத்துக்குள் கொண்டு சேர்க்கிறோம் என்ற சவாலை உடனடியாகத் திரும்பப் பெற வைத்து வாகன ஓட்டுநர்களையும், சாலையில் செல்லும் மற்றவர்களையும் அரசு பாதுகாக்க வேண்டும். ஏதேனும் விபத்து நேர்ந்த அதன் பிறகு சூரிய நமஸ்காரம் செய்யாமல் இப்போதே விழித்துக்கொள்ளவேண்டும். தேவை ஒரே ஒரு உத்தரவு. அவ்வளவே.

-நாராயணன்