சட்டவிரோத ஆப்கானிஸ்தானி கைது

ஆப்கானிஸ்தானின் காபூலைச் சேர்ந்தவரான ஈத் குல் என்பவர், போலி ஆவணங்கள் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் அங்கு வேலை செய்த அவர், தனது உறவினரான அசாமை சேர்ந்த அபாஸ் கான் என்பவர் வழியாக போலி ஆவணங்களை ஏற்பாடு செய்துள்ளார். ​​சி.எஸ்.ஒய்.எல் அதிகாரிகள் அவரது ஆவணங்களை மறுபரிசீலனை செய்தபோது இவ்விஷயம் தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான ஈத் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.

இவரது தந்தை ஆப்கானிஸ்தானியர், தாய் அசாமை சேர்ந்தவர். 3 மாத சுற்றுலா விசாவில் வந்த இவரது விசா நீட்டிப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அவரது மாமா அவரை கொச்சிக்கு அழைத்து வந்துள்ளார். விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் கட்டுமானம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள சூழலில், இந்த கைது முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, என்.ஐ.ஏ இவ்வழக்கை விசாரிக்கும்.

முன்னதாக, ஐ.என்.எஸ் விக்ராந்தில் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கையும் என்.ஐ.ஏதான் விசாரிக்கிறது. அதில் இரண்டு வட இந்திய பெயிண்டர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரமாக செயல்படுவதை அம்மாநில காவல்துறைத் தலைவர் ஓய்வுபெற்ற தினத்தன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.