தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசும் பொருளாக மாறியுள்ள தலைப்பு ‘கொங்கு நாடு’. இதனை தி.மு.கவினரும் அதன் அதன் கூட்டணி கட்சியினரும் எதிர்க்கின்றனர். ஆனால், கொங்கு மண்டலத்தில் உள்ள கட்சிகள், இந்த கோரிக்கையை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் ‘கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி’ தி.மு.க ஆதரவுடன் சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது. அக்கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன், தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், அக்கட்சித் தொண்டர்கள் ஈஸ்வரனுக்கு, ‘கொங்குநாட்டு முதல்வரே’ என்று பட்டம் சூட்டி கோவை மாவட்டத்தில் சுவர் விளம்பரம் எழுதியுள்ளனர். ‘கொங்கு நாடு’ என்ற பெயரை கேட்டாலே எரிச்சல் ஆகும் தி.மு.கவிற்கு அக்கூட்டணியில் இருக்கும் கட்சியினரின் இந்த சுவர் விளம்பரம் மேலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.