கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க முகநூல் இந்தியா நிர்வாக இயக்குநர் அஜித் மோகனுக்கு, டெல்லி சட்டப்பேரவை நல்லிணக்க குழு நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீஸை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அஜித் மோகன் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, நோட்டீஸை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ’27 கோடி பயனாளர்களை கொண்டுள்ள முகநூல் நிறுவனம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம் என அறிவுறுத்தினர். மேலும், சமூக ஊடக பதிவுகளால் தேர்தல் நடைமுறைகளே அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குரலை ஒலிக்க செய்வதில் சமூக ஊடகங்கள் மிக முக்கிய பங்கு வகித்தாலும், சில சமயங்களில் அமைதியை சீர்குலைக்கும் பதிவுகளுக்கான தளமாகவும் அமைந்துவிடுகிறது. இது போன்ற பதிவுகளால் ஏற்படும் பிரச்னைகளுக்கு முகநூல் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். சமூக ஊடக பிரதிநிதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும் அதிகாரம் டெல்லி சட்டப்பேரவைக்கும் அதன் குழுவுக்கும் உள்ளது’ என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.