தமிழக பா.ஜ.க துணை தலைவர் வி.பி.துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில், சில நாட்களாக ஆளுங்கட்சியை விமர்சனம் செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவதுாறு செய்திகளை பதிவிட்ட 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவதுாறு கருத்துகளை பதிவிட்ட நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என, தமிழக டி.ஜி.பி கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பித்தான் மக்கள் ஓட்டு போட்டனர். அதனை தற்போது நிறைவேற்ற முன்வராத அரசை கேள்வி கேட்ட தொழில்நுட்ப பிரிவினர்கள் மீது, வழக்கு பதிவு செய்வது அடக்குமுறை. தமிழக நிதி அமைச்சரின் தவறான பேச்சை சுட்டி காட்டியவர்களை கைது செய்கின்றனர். மேலும், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பராதி, ‘அவதுாறு பரப்பினால் சட்டம், ஒழுங்கு கெட்டு விடும்; எதற்கும் ஓர் எல்லை உண்டு’ என்று மிரட்டும் வகையில் கருத்து கூறுகிறார். குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கென்று சட்டத்தில் சில இலக்கணங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. இயற்கை நியதியை காவல் துறை மீறக் கூடாது’ என தெரிவித்துள்ளார்.