எதிர்காலத்தில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால், ஜம்மு – -காஷ்மீரின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்ற பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் கேள்விக்கு, ரத்து செய்யப்பட்ட அரசியல் சாஸன ஷரத்து 370ஐ மறு ஆய்வு செய்வோம் என சென்ற வாரம் காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங் பதில் அளித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைபாடே எடுக்கும் என்பது போல் உள்ளது பதில். 2014க்கு பின்னரும், நாடு விடுதலை பெற்ற தினத்திலிருந்தும் கூட காங்கிரஸ் கட்சி எடுத்தது பாகிஸ்தான் ஆதரவு நிலைபாடே.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2019 ஆகஸ்டில் விவாதித்து, வாக்கெடுப்பிற்குப் பிறகே 370 – ரத்து செய்யப்பட்டு, ஜம்மு – -காஷ்மீரின், லத்தாக் என இரு யூனியன் பிரதேசங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அரசியல் சாஸனத்தில் 370 சேர்க்கப்பட்டதோ, நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் முழுமையாக நடைபெறாமல்தான். அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் படேலிடம் கூட கருத்துப் பரிமாற்றம் நடத்தாமல் நேரு தன்னிச்சையாக கொண்டு வந்த ஷரத்து அது.
திக்விஜய் உதிர்த்த முத்துக்களில் சில:
முத்து 1: மத்திய அரசு 370-வது பிரிவை ரத்து செய்ததால் காஷ்மீரில் ஜமூரியத் (ஜனநாயகம்) இல்லாமல் போய்விட்டதாம். தலைவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்ததால், இன்சானியத் (மனிதாபிமானம்) இல்லாமல் போய்விட்டதாம். முஸ்லீம் பெரும்பான்மை மாநிலத்தில் ஒரு ஹிந்து ராஜா இருந்தாரே அந்த காஷ்மீரியத் (மதச்சார்பின்மை) இல்லாமல் போய்விட்டதாம். திக்விஜய் சிங் கதைக்கிறார். ஆமாம்,1946-ல் ஷேக் அப்துல்லா மகாராஜாவை எதிர்த்து ”காஷ்மீரை விட்டு வெளியேறு” என்ற போராட்டத்தை நடத்தினாரே, அது என்ன கதை? அதுவும் குறிப்பாக நாடு விடுதலை பெறும் வேளை பார்த்து!
முத்து 2: காஷ்மீர் அரசாங்கத்தில், காஷ்மீர் பண்டிட்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாம். சுத்தப் பொய். 1945 ஆகஸ்ட்டில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆண்டு கூட்டத்தில் “முஸ்லீம் அல்லாதவர்கள் காஷ்மீரில் வாழ விரும்பினால், அவர்கள் தேசிய மாநாட்டில் சேர வேண்டும் அல்லது இங்கிருந்து விடை பெற வேண்டும். காஷ்மீரில் உள்ள பண்டிட்கள் சேரவில்லை என்றால், எதுவும் அவர்களைப் பாதுகாக்காது” என கூறப்பட்டது. 1990-ல் அப்படியே ஆயிற்று. சுமார் 2 லட்சம் ஹிந்து பண்டிட்கள் அகதிகளாக தங்களது சொந்த நாட்டில் வாழ வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். வன்முறையின் மூலம் ஹிந்து பண்டிட்களை வெளியேற்றினார்கள் மதவெறியர்கள். விவகாரம் இப்படியிருக்க காஷ்மீர் ஹிந்து பண்டிட்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினார்களாம்! நல்ல கூத்து! மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசும் மாநிலத்தில் ஆண்ட பரூக் அப்துல்லாவின் அரசும் கையைக் கட்டிக் கொண்டிருந்தன என்பதுதான் உண்மை.
சற்றே வரலாறு
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 1,100 மசூதிகளிலும் ஹிந்து பண்டிட்கள் மீது வெறுப்பை உமிழும் பிரசங்கங்கள் செய்யப்பட்டன. 1990 ஜனவரி 4ம் தேதி ’அல்டாப்’ நாளிதழ், ஹிந்து பண்டிட்கள் உடனடியாக பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற வேண்டும் என ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு விடுத்த அறிக்கையை முதல் பக்கத்தில் வெளியிட்டது. இதே செய்தியை ’அல்ஷபா’ என்ற இதழும் வெளியிட்டது. இரண்டும் காஷ்மீரிலிருந்து வெளியாகும் பிரிவினைவாத ஆதரவு பத்திரிகைகள்.
பரூக் அப்துல்லா ஆட்சி கலைக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் முழு ஊரடங்கு வந்ததும், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் காஷ்மீர் வீதிகளில் ஹிந்து பண்டிட்களுக்கு எதிராக “Death to India! Death to kafirs!” என்று கோஷமிட்டு சென்றபோது, அவர்களைத் தடுக்கத் தவறியவர்கள் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியினர். ஹிந்து பண்டிட்களுக்கு எதிராக ஹுரீயத் மாநாட்டு கட்சியினரும் ஜம்மு – -காஷ்மீரின் விடுதலை இயக்கமும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பும் விடுத்த பகிரங்க எச்சரிக்கை இது: “ஒன்று, காஷ்மீர் ஹிந்து பண்டிட்கள் முஸ்லீமாக மதம் மாற வேண்டும், அல்லது காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேற வேண்டும் இல்லை என்றால் கொல்லப்படுவார்கள்”. அந்த நாளில் இந்த திக்விஜய் சிங் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர்!