தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘தமிழகத்தில் உள்ள, கட்டணம் அல்லது கட்டணமில்லாமல் செயல்பட்டு வரும் அனைத்து முதியோர் இல்லங்கள், தனியார், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் அனைத்து முதியோர் இல்லங்கள், முதியோர்களுக்கான குத்தகை விடுதிகள், மற்றும் வாடகை விடுதிகள் அனைத்தும் 2009ம் ஆண்டின் தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல விதிகளின் கீழ் வரும் 31.07.2021க்குள் பதிவு செய்யப்பட வேண்டும். சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை 23.11.2016ல் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி அந்த இல்லங்களை பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மகளிர் விடுதிகள் நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் விடுதிகளை 2014ம் ஆண்டைய தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டத்தின் பிரிவுகள் 3, 4 ஆகியவற்றின்படி, விடுதிகள் நடத்துபவர்கள் வருகிற 31ம் தேதிக்குள் உரிமம் பெற்று கட்டாய பதிவு செய்ய வேண்டும். அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளின்படி இந்த விடுதிகள் பராமரிக்கப்பட வேண்டும். இந்த அறிவுரைகளை பின்பற்ற தவறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அவர்கள் அணுகலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.