திருமலையில் உள்ள லட்டு பிரசாத மையங்களில், வங்கி ஊழியர்கள், ஸ்ரீவாரி சேவா உறுப்பினர்கள் இணைந்து பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பணியையும் வேறு சில பணிகளையும் தனியார் வசம் ஒப்படைக்க தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. இதில் டெண்டர் மூலம் பெங்களூரு கே.வி.எம் இன்ஃபோ எனும் தனியார் நிறுவனத்தின் 43 ஊழியர்களை, லட்டு விநியோக மையங்கள், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் ஸ்கேனிங் பகுதி, சர்வ தரிசன டோக்கன் விநியோக மையங்கள், தங்கும் அறை ஒதுக்கும் மையங்கள் உள்ளிட்ட 164 இடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். முதல் கட்டமாக லட்டு பிரசாத மையங்களில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யும் பணியை தனியார் ஊழியர்கள் தொடங்கினர். இதனை திருப்பதி தேவஸ்தானமே முழுமையாக ஏற்று நடத்த வேண்டும், ஹிந்துக்கள் மட்டுமே இப்பணிகளில் ஈடுபட வேண்டும், ஆகம விதிகள் முழுமையாக பின்பற்றப்பட்டு கோயிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்களிடம் எழுந்துள்ளது.