நாட்டின் தலையெழுத்தை முடிவு செய்வதில் மக்கள்தொகை முக்கியப் பங்காற்றுகிறது. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் ஜனநாயகம், கருத்து சுதந்திரம், உண்மையான மதச்சார்பின்மை, தேசத்தின் பாதுகாப்பு போன்றவை இயல்பாக நிலவி வருகின்றன. எங்கெல்லாம் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைகிறதோ, அங்கெல்லாம் தேசத்திற்கு எதிரான பிரிவினைவாதம் தலைதூக்கி தேசத்தின் ஒற்றுமைக்கு பெரும் சவாலாக இருந்து வருவதையும் நாம் பார்த்து வருகிறோம். இது ஒன்றும் யாரும் அறிந்திடாத ரகசியமல்ல. தேசப் பிரிவினையே இத்தகைய மக்கள்தொகை மாற்றத்தால் நிகழ்த்ததுதான் என்பதை பெரும்பாலோர் மறந்துவிட்டார்கள் என்று சொல்வதைவிட, மறக்கடிக்கப்பட்டார்கள் என்பதே சரி.
ஹிந்துக்களின் மக்கள்தொகையில் சரிவு ஏற்பட்டு அந்நிய தேசத்து மதங்களான இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள பகுதிகளில் தேசவிரோத செயல்கள் வெளிப்படையாக நடைபெற்று வருவதை பல ஆண்டுகளாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து மதச்சார்பற்றத்தன்மை அல்லது செக்யூலரிஸம் என்ற போதனையால் ஹிந்துக்களின் கண்கள் கட்டப்பட்டு சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு வந்துள்ளதால் முஸ்லிம், கிறிஸ்தவ வாக்கு வங்கி அரசியல் ஹிந்துக்களின் உரிமைகள், அரசியல் அதிகாரத்தைக் கரையான் போன்று அரித்து வருவதை உணராமல் இருந்து வருகின்றனர் என்பதை அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் உணர்த்தியுள்ளன.
1891ல் அஸ்ஸாம் மக்கள்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 5 சதவீதம் மட்டுமே இருந்தது. 1901ம் ஆண்டு கணக்கெடுப்பில் கோல்பாரா, கச்சார் ஆகிய 2 மாவட்டங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை முறைப்படியே 25 சதவீதம், 30 சதவீதம் ஆக அதிகரித்தது. தற்போது இந்த இரண்டு மாவட்டங்களில் அது முறைப்படியே 57 சதவீதம், 38 சதவீதம் ஆக உள்ளது. 2001ல் அஸ்ஸாம் மக்கள்தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 30 சதவீதம் ஆக இருந்தது; 2011ல் 34 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. அஸ்ஸாமில் 7 மாவட்டங்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மை ஆகிவிட்டனர். நைகான், கோல்பாரா, ஹைலைகண்டி, மோரிகாவோ, தூப்ரி, பார்பேட்டா, கரீம்கஞ்ச் ஆகிய ஏழு மாவட்டங்களும் அண்டை நாடான வங்கதேசத்தின் எல்லைப் பகுதியைத் தொட்டு அமைந்துள்ளன. வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவி வந்தவர்களால் அந்த மாவட்டங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கைமிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்பது நாடறிந்த ரகசியம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இந்திரஜித் குப்தா, மத்திய உள்துறை அமைச்சராக (1996-–-97) இருந்தபோது 2 கோடி வங்கதேசத்தவர் சட்டவிரோதமாக நமது நாட்டிற்குள் ஊடுருவி வசித்து வருகின்றனர் என்று கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். 2040ல் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் மாநிலமாக அஸ்ஸாம் மாறிவிடும் என்று பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அஸ்ஸாமை பூர்விகமாகக் கொண்ட முஸ்லிம்கள் எண்ணிக்கை சாதாரணமாகவே இருந்து வருகிறது. அவர்களும் வங்கதேச ஊடுருவல்காரர்களை எதிர்த்து வருகின்றனர்.பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அஸ்ஸாமில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 126 இடங்களில் பா.ஜ.க. 60, அஸ்ஸாம் கண பரிஷத் 9, ஐக்கிய மக்கள் முன்னணி லிபரல் 6 இடங்களில் வெற்றி பெற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 75 இடங்களைப் பிடித்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 29 இடங்களிலும், அதன்கூட்டணிக் கட்சிகளான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (இது வங்கதேச ஊடுருவல் முஸ்லிம்கள் ஆதரவுக் கட்சி) 16, போடோலேண்ட் மக்கள் முன்னணி 4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்தக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட 37 முஸ்லிம் வேட்பாளர்களில் 31 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதில் காங்கிரஸ் கட்சியில் 15 வேட்பாளர்களும், ஏ.ஐ.யூ.டி.எப். வேட்பாளர்களில் 16 பேரும் முஸ்லிம்கள் ஆவர். பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட 8 பேர், அதன் கூட்டணிக் கட்சி சார்பில் 9 பேர் என மொத்தம் 17 முஸ்லிம் வேட்பாளர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ஆதரித்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) நடைமுறைப்படுத்துவோம் என்றும் சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்றி அஸ்ஸாமின் அடையாளத்தைப் பாதுகாத்திடுவோம் என்று பிரச்சாரம் செய்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெருவாரியான அஸ்ஸாம் ஹிந்துக்கள் வாக்களித்துள்ளனர். காலம் காலமாக வங்கதேச முஸ்லிம்களின் ஊடுருவலை ஆதரித்து வந்துள்ள காங்கிரஸ் கூட்டணிக்கே ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் வாக்களித்துள்ளனர் என்பது தேர்தல் முடிவுகளில் தெளிவாக எதிரொலித்துள்ளது.மேற்கு வங்கத்திலும் அஸ்ஸாம் மாநிலத்தைப் போன்ற நிலைமைதான் நிலவி வருகிறது. 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்
பில் மாநிலத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 27 சதவீதம் ஆகும். 9.13 கோடி உள்ள மாநில மக்கள்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2.47 கோடியாகும். 2021ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
முர்ஷிதாபாத் (67 சதவீதம்), மால்டா (51 சதவீதம்), 24 பர்கானா தெற்கு (36 சதவீதம்), 24 பர்கானா வடக்கு (26 சதவீதம்), பிர்பும் (37 சதவீதம்), வடக்கு தினாஜ்பூர் (50 சதவீதம்) ஆகிய மாவட்டங்கள் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள பகுதிகளாக மாறிவிட்டது. மேலும் ஹௌரா, பர்துவான் (கிழக்கு) ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தேர்தல் முடிவுகளை முடிவு செய்யக்கூடிய கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் உள்ளனர். மேற்கண்ட மாவட்டங்களில் முஸ்லிம்கள் மக்கள்தொகையில் 42 சதவீதம் ஆவர். மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 118 தொகுதிகளின் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் சக்தி இவர்களிடம் உள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது முஸ்லிம் வாக்குகள் திரிணமூல் காங்கிரஸுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இரண்டாகப் பிரிந்ததால் அந்தத் தொகுதிகளில் பெரும்பான்மை ஹிந்துக்களின் ஆதரவைப் பெற்று பா.ஜ.க வெற்றி பெற்றது. அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் சிதறாமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கே சென்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உதவியது. மாநிலம் முழுவதும் முஸ்லிம் மௌலவீக்கள், மதத் தலைவர்கள் அனைவரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே வாக்களித்து மம்தாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று தீவிர பிரச்சாரம் செய்து, முஸ்லிம் வாக்குகளை ஒன்றுதிரட்டி, மமதாவின் வெற்றிக்கு உதவியுள்ளனர். மமதாவின் அமைச்சரவையில் நூலகத் துறை அமைச்சராக இருந்தவர் சித்திக் குல்லா சௌத்ரி. இவர், ஜமாத் உலேமா இ ஹிந்த் என்ற உலேமாக்கள் சபையின் மாநிலத் தலைவர் ஆவார். தேர்தலுக்கு முன்பு அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், மாநிலத்தில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் அனைவரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்று கூறியுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 42 முஸ்லிம்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களில் 41 பேர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர், ராஷ்ட்ரிய செக்யூலர் மஜ்லிஸ் கட்சியின் முகமது நவாஸ் சித்திக்.ஹிந்துக்களின் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு அதிகம் விழுந்தபோதிலும் ஹிந்துக்களின் வாக்கு ஒன்றுதிரண்டு அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. வழக்கம் போல் ஹிந்து வாக்குகள் சிதறிப்போய்விட்டதாலும், முஸ்லிம்களின் ஒன்றுதிரண்ட வாக்குகளின் உதவியினாலும் மமதா பானர்ஜி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார். மாநிலத்தில் ஹிந்துக்களிடையே ஏற்பட்டு வரும் விழிப்புணர்வால், ஹிந்துக்களும் அதிக அளவில் பா.ஜ.க.வை ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பதை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
கேரளத்திலும் இதே காட்சியைக் காண முடிகிறது. 140 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கேரள சட்டப்பேரவைக்கு 32 முஸ்லிம்கள் தேர்வாகியுள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 15, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9, காங்கிரஸ் கட்சி 3, இந்தியன் நேஷனல் லீக் 1, நேஷனல் செக்யூலர் லீக் 1, 3 சுயேட்சைகள் என 32 பேர் தேர்வாகியுள்ளனர். கடந்த அவையில் 29 முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தனர். காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் அக்கட்சிக்கு வெறும் 21 உறுப்பினர்களே உள்ளனர். அவர்களில் 9 பேர் மட்டுமே ஹிந்துக்கள்.
தமிழக சட்டப்பேரவைக்கு பல்வேறு கட்சிகளில் இருந்து 6 முஸ்லிம் வேட்பாளர்களும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஒருவரும் தேர்வாகியுள்ளனர். தமிழகத்திலும் முஸ்லிம்
கள் ஒன்று திரண்டு தி.மு.க. கூட்டணிக்கே வாக்களித்துள்ளனர். அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பள்ளப்பட்டி, ஊட்டி தொகுதியில் ஊட்டி நகரில் பதிவாகியுள்ள வாக்குகள், கோவை தெற்கு தொகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் பதிவாகியுள்ள வாக்குகளைப் பார்த்தால் இது தெளிவாகத் தெரியும்.
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த ஹிந்துக்கள், 1990ம் ஆண்டு அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டனர். அதற்கு முன்பிலிருந்தே அங்கிருந்த ஹிந்து வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள் என ஹிந்து சமுதாயத்தின் பிரபலமான பலரும் கொல்லப்பட்டனர். இதுபோன்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தி, ஹிந்துக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், பாகிஸ்தான் துணையுடன் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் குறிக்கோளாக இருந்து வந்தது. ஹிந்துக்களை காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருந்து அடித்து விரட்டியபோது எந்தவொரு மதச்சார்பற்ற கட்சியும் கண்டனக் குரல் எழுப்பவில்லை. மனித உரிமை பேசும் அறிவுஜீவிகள் அப்போது காணாமல் போய்விட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக சட்டப்பிரிவுகள் 35ஏ, 370 போன்றவை நீக்கப்பட்டு, மாநில அந்தஸ்து அகற்றப்பட்டு யூனியன் பகுதியாக அறிவிக்கப்பட்டும்கூட, காஷ்மீரில் இருந்து உயிர் தப்பி இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற ஹிந்துக்கள், பாதுகாப்பு கருதி மீண்டும் அங்கு சென்றிடத் தயங்கி நிற்கின்றனர். நாட்டின் வடகிழக்குப் பகுதிகளிலும் இதே அபாயங்கள் நிலவுகின்றன. மிஸோரம் மக்கள்தொகையில் 87 சதவீதம் கிறிஸ்தவர்கள். ஹிந்துக்கள் வெறும் 3 சதவீதம் மட்டுமே உள்ளனர். நாகாலாந்து மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் 88 சதவீதம், ஹிந்துக்கள் 9 சதவீதம் உள்ளனர். மேகாலயாவில் கிறிஸ்தவர்கள் 75 சதவீதம், ஹிந்துக்கள் 12 சதவீதம் ஆக இருக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவ, ஹிந்துக்களின் மக்கள்தொகை சரிசமமாக 41 சதவீதம் உள்ளது. அருணாசல பிரதேசத்தில் கிறிஸ்தவர்கள் 30 சதவீதம் ஹிந்துக்கள் 29 சதவீதம் உள்ளனர். திரிபுராவில் ஹிந்துக்கள் 84 சதவீதம் உள்ளனர். அஸ்ஸாமில் ஹிந்துக்கள் 61 சதவீதம், முஸ்லிம்கள் 34 சதவீதம், கிறிஸ்தவர்கள் 4 சதவீதம் உள்ளனர். கேரளத்தில் ஹிந்துக்கள் 54 சதவீதம், முஸ்லிம்கள் 27 சதவீதம், கிறிஸ்துவர்கள் 18 சதவீதம் உள்ளனர்.
நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் காப்பாற்றப்பட வேண்டுமெனில் ஹிந்துக்களின் மக்கள்தொகை வீழ்ச்சியடையாமல் அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து இருந்து வர வேண்டும். ஹிந்துக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையும் பகுதிகளில் பிரிவினைவாதங்கள் தலைதூக்கி தேசவிரோத சக்திகளின் கூடாரமாக மாறிவந்துள்ளன. நாட்டில் மக்களாட்சி, பாரதியப் பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், மொழிகள், கோயில்கள் ஆகியவற்றை பாதுகாத்து நாட்டின் தலைவிதியை முடிவு செய்யப் போவது ஹிந்துக்களின் மக்கள்தொகையும் ஹிந்து வாக்கு வங்கியும்தான். ஹிந்துக்களுக்கு இது எப்போது புரியப் போகிறதோ?.
கட்டுரையாளர் : ‘விஜயபாரதம்’ முன்னாள் ஆசிரியர்.